செய்திகள்
கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம்

கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - குறை தீர்க்கும் கொங்கணகிரி முருகன்

Published On 2021-10-29 12:39 GMT   |   Update On 2021-10-29 12:39 GMT
கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் என்ற தலைப்பில் குறை தீர்க்கும் கொங்கணகிரி முருகன் தொடர்பாக ஜிஏ பிரபா ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேலை காக்கின்ற நீலவள்ளி
முற்றாத தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவேந்தர் லோக சிகாமணியே  -கந்தரலங்காரம்.

முருகனின் நிறம் என்ன ?  
“சேயோன்” என்கிறது தொல்காப்பியம்.
பழைய தமிழ் இலக்கியங்களில் அவன் செந்நிறமுடையவன் என்றே குறிப்பிடப் படுகிறான். “செய்யன் சிவந்த ஆடையன்” என்கிறார் நக்கீரர். ஈசன் பவழ மேனியன். அவனில் இருந்து உருவானவன் முருகன். இருவரும் வேறு வேறு அல்ல. எனவேதான் அவனும் செந்நிற மேனியன் என்கிறார்கள்.

பெரிய பெயர் பெற்ற அவனை உயர்ந்த இடத்தில் வைத்துப்பார்க்க விருப்பப்பட்டே குன்றின் மேல் குடியமர்த்தினார்கள் குகனை. தமிழர்கள் முருகன் மேல் கொண்ட பேரன்பிற்கு அளவில்லை. உலகம் முதலில் கடலில் மூழ்கியிருந்தது. பின் நீர் வடிய ஆரம்பித்ததும் முதலில் மலை தோன்றி அதன் பின்னரே மண் தோன்றியது. முதலில் தோன்றிய நிலப்பகுதி குறிஞ்சி. அந்த நிலத்தின் தலைவனாக முருகனையே அமைத்தனர் தமிழர்கள்.

“சேயோன் மேய மைவரை உலகமும்”- என்கிறது தொல்காப்பியம்.
கல்வி, பண்பு, குணம் இவற்றில் சிறந்து விளங்குபவர்களை உயரிய ஆசனத்தில் வைத்துப் பார்ப்பது தமிழர்களின் பண்பு.  தெய்வத்தையும் உயர்ந்த ஆசனத்தில் வைத்து வணங்க விரும்பிய தமிழர்கள், எது உயர்ந்தது என்று யோசித்து  மண் பரப்பின் மீது உயர்ந்து நிற்பது மலை என்று மலையின் மேல் ஆண்டவனை அமைத்துக் கொண்டாடினார்கள்.

அதில் சில மலைகளின் மேல் கந்தனே ஆர்வமுடன் வந்து அமர்ந்து கோயில் கொண்டான். அதில் சிறப்பு பெற்ற தலமாக விளங்குவது கொங்கணகிரி. முருகனின் அருள் நிறைந்து காணப்படும் தலங்களில் இது முக்கியமானது. அருண கிரியாரின் திருப்புகழ் பாடப் பெற்ற தலம் இது.
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
இந்திப லற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன மருள்வாயே” என்று முருகனைத் துதிக்கிறார் அருணகிரியார்.

முருகா என்று அன்போடும், நம்பிக்கை யோடும் துதிக்கும் அடியவர்களுக்கு அருள் புரிய ஓடி வருகிறான் கொங்கணகிரி குமரன். அவன் அருள் நிறைந்து விளங்கும் தலம் இது.

திருப்பூர் அருகே ஒரு குன்றின் மீது சுயம்புவாக தவக்கோலத்தில் குமார சுவாமியாக கோயில் கொண்டிருக்கிறான் குமரன். ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில் கொங்கண சித்தரால் உருவாக்கப்பட்டது.

இங்கு முருகன் யந்திர ரூபமாக இருப்பதால், மூலவர் பிரதிஷ்டையின்போது விக்கிரகத்தின் கீழ் யந்திரங்கள் பதிக்கப்படாமல், பீடத்திலேயே யந்திரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மூலவர் முன் சமர்ப்பிக்கப்படும் பால் தானாகவே பொங்குகிறது இத்தலத்தில். எனவே இது பொங்கு திருத்தலம் என்று போற்றப்படுகிறது. மற்றொரு அற்புதம் குன்று முழுவதும் திகழும் பால மரம். இம்மரத்தின் குச்சிகளை எடுத்துச் சென்று தங்கள் வீட்டின் சுப காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

கோயிலின் வாயு மூலையில் வெங்கடேசப் பெருமாளும்,கன்னி மூலையில் செல்வ கணபதியும், ஈசான மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடனும், வாகனங்களுடனும் காட்சி அளிக்கின்றனர். இத்தலம் செவ்வாய் தோஷத் தளமாக விளங்குகிறது.சஷ்டி வழிபாடும், செவ்வாய்கிழமைகளில் திரிசதி வழிபாடும் விமர்சையாக நடைபெறுகின்றன.  தல விருட்சமாக பெண் மரமான வக்கனை மரம் திகழ்கிறது. இதன் அடியில் சுயம்புவாக அருளும் முருகனையே சித்தர்கள் வழிபட்டார்கள்.ஆண் மரமான அரச மரம் வெளியில் உள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள், இந்த மரத்துக்கு தாலிச்சரடு கட்டி வழிபடுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்கள், இதில் தொட்டில் கட்டியும் வழிபடுகிறார்கள்.



கொங்கண சித்தரை வழி படுவதன் மூலம் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். கருவறையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் அருள் பாலிக்கிறான். ராஜகோபுரம் பகுதியில் இருந்து  மலைக் கோவிலுக்கு வரும் வழித்தடம் முழுவதும் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்நூறு மீட்டர் நீளம், முப்பது மீட்டர். அகலம் உள்ள பாதையாக அமைந்துள்ளது.

மலை மீது பாலை மரங்களுக்கு மத்தியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கோயில் அமைந்துள்ளது. எழுபத்தி இரண்டு அடி உயரம் உள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
    
கொங்கண சித்தரால் அமைக்கப்பட்டது என்பதால் கொங்கணகிரி என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். முருகன் பல அற்புதங்கள் செய்யும் அருள் நிறைந்தவனாக விளங்குகிறான். சித்தரைப் பற்றிப் பல கதைகள் உள்ளது . அதில் ஒன்றுதான் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என்ற சொல் வழக்கு.

ஒருமுறை  இவர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது மரக்கிளையில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று எச்சமிட இவரின் தவம் களைந்து போனது. அதைக் கோபத்துடன் சித்தர் உற்று நோக்க அது எரிந்து போனது.  அதன் பின் ஆகாரம் தேடி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று உன்ன உணவு கேட்க, அந்த இல்லத்தலைவி காலம் தாழ்த்தி உணவு அளித்தார்.

சித்தர் அந்த அம்மையாரை சினத்துடன் நோக்க “எரிந்து போக நான் ஒன்றும் கொக்கு அல்ல கொங்கணவா?” என்று சொல்ல அவளின் கற்பின் திண்மை அறிந்து வியந்து போனார் கொங்கணவர்.



அதன் பின்னர் போகரிடம் சென்று தீட்சை பெற்று, திருமலையில் யோக சமாதியில் அமர்ந்தார் என்று கூறுகிறார்கள். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது,  தன்னடக்கத்துடன் இருப்பது ஆகிய வைகளே மனிதனிடம் தெய்வத் தன்மையை உண்டாக்குகிறது என்று போதித்தார்.கொங்கணகிரி முருகனைப் பற்றி அருண கிரியார் பாடியுள்ளார்.  

ஐம்புலன்களையும் அடக்கி இரவு பகல் இவை பற்றிய நினைவை ஒதுக்கி எப்போதும் உன்னை நினைக்கும் மனம் வேண்டும் என்கிறார். உன் பாதத்தை அடையும், யோக நிலையை எனக்கு உரைப்பாய் என்று வேண்டுகிறார். உன்னையே நினைத்து நிலையான அமைதியைப் பெற நீ அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.
 
முருகனிடம் பயன் எதுவும் கேட்க வேண்டியதில்லை. முருகா என்றால் அவனே வேண்டிய அனைத்துப் பயன்களையும் அருள்வான் என்கிறார்கள். அருணகிரியார் நெற்றாப் பசுங்கதிர் என்ற பாடலில் அவர் முருகனைப் பலவாறு புகழ்கிறார்.

முதிராத பசுமையான கதிர்களை உடைய சிவந்த தினைப்புனத்தை காவல் காக்கும் வள்ளியம்மையின் தலைவனாக விளங்குகிறார் முருகன்.கரும்பு வில், முல்லை அம்பு, அம்புக்கூடு ஆகியவற்றோடு மன்மதன் வெந்து சாம்பலாகும் படி தன் நெற்றிக் கண்ணால் எரித்த சிவபெருமானின் திருமகனான முருகனை வணங்கினால் தேவேந்திர லோகத்துக்கு அதிபதியாவார் என்கிறார்.

பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில் வேலும்- கச்சைத்
திருவரையும் சீறடியும் செங்கையும் சரச
அருள்விழியும் என்று போற்றுகிறார் குமரகுருபரர் கலிவெண்பாவில்
முருகனின் அருள் விழிகள் அச்சம் அகற்றுகின்றன.அவனின் சீறடிகள் இருள் நீக்குகின்றன. இறைவனின் திருவருளை அடையும் முயற்சியில் இடையறாது ஈடுபட வேண்டும். உடம்பினால் வணங்கி, வேண்டினாலும் மனதால் அவனையே நினைத்து உருக வேண்டும்.

இந்த உடலின் ஒவ்வொரு உறுப்பும் இறைவனின் திருத்தொண்டில் ஈடுபட வேண்டும். மனம் அவனோடு ஒன்று படுவதுதான் தியானம். வெளியில் இருக்கும் இறைவனின் திருவுருவத்தை உள்ளத்தில் காணும் முயற்சியே பக்தி ஆகும். ஆனால் முருகா என்றால் அவனின் வேலும் மயிலும் உடனே வந்து நம் முன் நிற்கும். அவனின் உருவத்தையும், கருணையையும் அடைய விரதமோ, வேண்டுதலோ, வழிபாடோ தேவையில்லை. அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு முருகா என்று அழைத்தால் போதும்.

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
எனது உளத்தில் நிறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே” என்கிறது வேல் விருத்தம்.அடியார்கள் மனதில் பதியவே ஆண்டவன் பல உருவங்கள் எடுக்கிறான். அதில் முருகன் சிறந்ததாக இருக்கிறான்.

ஏதேனும் ஒரு தேவதையை நினைத்து உபாசிப்பவர்கள் முதலில் தியான சுலோகம் சொல்வார்கள். அந்த தெய்வம் அதில் அமர்ந்து நம் மனதில் நிலை கொள்ளும். குரு உபதேசமாக  இதை அறிய வேண்டும் என்பார்கள், ஆனால் தன் அடியவர்களுக்கு முருகனே குருவாக இருக்கிறான்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்கிறது அனுபூதி.
அவனையே நினைத்து, அவனையே உபாசித்தால் அனைத்தும் அருள்பவன் முருகன்.

Tags:    

Similar News