செய்திகள்
மழை

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்

Published On 2021-07-24 07:54 GMT   |   Update On 2021-07-24 07:54 GMT
கேரளத்தில் தொடர் மழையால் நீர் நிலைகள் உயர்ந்து வருவதால் கல்லர்குட்டி அணையில் உபரிநீர் திறக்கப்பட்டது.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஜூலை 26 வரை அங்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காஞ்சியார், கட்டப்பனா, வந்தன்மேடு, அனக்கரா உள்ளிட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் 23 ஆம் தேதி வரையில் 98.81 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இவை கடந்த ஆண்டு பெய்த 46.43 சென்டி மீட்டர் மழையை விட இருமடங்காகும்.

கேரளத்தில் தொடர் மழையால் நீர் நிலைகள் உயர்ந்து வருவதால் கல்லர்குட்டி அணையில் உபரிநீர் திறக்கப்பட்டது. முன்னதாக  நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  மழை பெய்ததை அடுத்து பெரியார் ஆற்றின் கரைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தியுள்ளனர். இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், பொதுமக்கள் யாரும் இரவில் பயணம் செய்யக்கூடாது என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்ற ஆண்டு பருவமழையின் போது இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடி  எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News