ஆன்மிகம்
மாரியம்மன்

கோவிந்தராஜ் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது

Published On 2019-08-16 06:23 GMT   |   Update On 2019-08-16 06:23 GMT
கோவிந்தராஜ் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு கோவிந்தராஜ் நகர் கே.எச்.பி. காலனியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தமிழர்களும், கன்னடர்களும் சேர்ந்து திருவிழா கொண்டாடி வருகிறார்கள். 1969-ம் ஆண்டுக்கு முன்பாக பெங்களூரு கலாசிபாளையம் பகுதியில் வசித்து வந்த தமிழர்களுக்கு, கர்நாடக அரசு சார்பில் 4 இடங்கள் குடியிருப்பதற்கு வழங்கப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் கோவிந்தராஜ் நகருக்கு வந்து தங்கினார்கள்.

அப்போது அங்கு சிறிய அளவிலான கோவில் எழுப்பப்பட்டு ஆதிபராசக்தியின் அம்சமான மாரியம்மனை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டனர். 1982-ம் ஆண்டில் இந்த கோவிலின் நிர்வாக பொறுப்பிற்கு எம்.ஜி.ஆர். மணி வந்தார். அதன்பிறகு மாரியம்மன் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த கோவிலில் 40-வது ஆண்டு விழா நேற்று (15-ந்தேதி) முதல் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நேற்று காலை 9 மணிக்கு கங்கா பூஜை மற்றும் கணபதி அலங்காரமும், அம்மன் வீதி உலாவும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலை 5.30 மணி அளவில் கரகம் மற்றும் தீமிதி விழாவும் நடக்கிறது.

இதையடுத்து வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) வெங்கடேசுவர சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. அதன்பின்னர் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாந்தி பூஜையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். மணி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News