செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக எம்எல்ஏக்கள் 6ந்தேதி சென்னைக்கு அழைப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Published On 2020-10-03 01:57 GMT   |   Update On 2020-10-03 01:57 GMT
அதிமுக எம்எல்ஏக்கள் 6-ந்தேதி சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளார்களா? என்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு இன்னும் 6 மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் உயர் நிலை கூட்டமும், அதனை தொடர்ந்து செயற்குழு கூட்டமும் கூட்டப்பட்டது. இந்த கூட்டங்களில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை பூதகரமாக வெடித்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த விஷயத்தில் நேருக்கு நேர் விவாதங்களை முன்வைத்தனர். இதனால் செயற்குழுவில் பெரும் பரபரப்பு நிலவியது. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்சினையை வெளி கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க கூடாது அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தனர். சமீபத்தில் சென்னையில் நடந்த அரசு விழா அழைப்பிதழ் மற்றும் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேநேரத்தில், நேற்று நடந்த காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தின நிகழ்வில் அவர்கள் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். இதற்கிடையே, காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினத்திற்கு வந்திருந்த அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை நேற்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி.யும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் சி.வி.சண்முகமும் சந்தித்து பேசினர்.

இந்தநிலையில், வரும் 6-ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என்று கட்சி தலைமையில் இருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவிப்பு பறந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் கட்சி தலைமை வெளியிடவில்லை.

இது தொடர்பான அறிவிப்பு கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு, சற்று நேரத்தில் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் வருவதற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதா?, இல்லையா? என்பது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

“அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு வரும்படி அழைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தி. இதுகுறித்து தலைமைக் கழகத்தில் இருந்து சென்னை வர வேண்டும் என்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது ஒரு ஆதாரபூர்வமற்ற செய்தி. தேவையில்லாமல் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சில தீய சக்திகள் இதுபோன்ற சித்து விளையாட்டுகளை விளையாடுகின்றன. எதையும் ஆதாரப்பூர்வமாக தலைமைக் கழகத்தில் இருந்து வந்தால்தான் அதை அதிகாரபூர்வமான செய்தியாக எடுத்துக்கொள்ள முடியும். மொத்தத்தில் இது வதந்தி... வதந்தி... வதந்தி...”

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News