செய்திகள்
சசி தரூர்

வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்: சசி தரூர் தலைமையில் நவம்பர் 20ம் தேதி விசாரணை

Published On 2019-11-06 09:37 GMT   |   Update On 2019-11-06 09:37 GMT
இந்தியர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து சசி தரூர் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவின் அடுத்த கூட்டத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
புதுடெல்லி:

‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு நிறுவனம், ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் 1400 பேரின் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்த்ததாக வாட்ஸ் ஆப் நிறுவனம், அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

அதில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.

இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, 'வாட்ஸ் -அப்' நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.  

‘என்.எஸ்.ஓ. நிறுவனம் மீது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும், உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 1,400 பேரின் மொபைல் போன்களுக்கும் விசேஷ ‘வாட்ஸ்-அப்’ செய்தி அனுப்பி, உஷார்படுத்தி உள்ளோம். பயனாளர்களின் அடிப்படை அந்தரங்க உரிமைகளை பாதுகாக்க ‘வாட்ஸ்-அப்’ உறுதி பூண்டுள்ளோம்’ என வாட்ஸ்-அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பதுறையின், பாராளுமன்ற மத்திய நிலைக்குழு இவ்விவகாரத்தை விசாரிக்க உள்ளது. இது தொடர்பான விவரங்களை உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் என தெரிகிறது.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தியர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது மிகுந்த கவலையளிக்கிறது. இது குறித்து நவம்பர் 20ம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் விசாரிக்கப்படும் என சசி தரூர் தனது குழுவினருக்கு தெரிவித்தார்.

உளவு மென்பொருளை உருவாக்கியதாக கூறப்படும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News