ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்த போது எடுத்த படம்.

தசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் காப்பு களைந்த பக்தர்கள்

Published On 2019-10-10 06:21 GMT   |   Update On 2019-10-10 06:21 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையொட்டி விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்த பக்தர்கள், தசரா குழுக்கள் அமைத்து, ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கை வசூலித்தனர். இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. முதலில் கடற்கரையில் போர் புரிய வந்த மகி‌ஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். தொடர்ந்து சிங்க முகம், எருமை தலை, சேவல் என அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகி‌ஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார்.

பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேடம் அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்கள், கோவில் உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்தினர்.

11-ம் நாளான நேற்று காலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் அம்மன் கோவில் வந்து சேர்ந்ததும் கொடியிறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனின் காப்பு களையப்பட்டது. பின்னர் வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் களைந்தனர். இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

12-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் நிர்வாக அலுவலர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News