செய்திகள்
போலீசார் விசாரணை

திருப்பூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரிடம் விசாரணை

Published On 2020-11-27 05:07 GMT   |   Update On 2020-11-27 05:07 GMT
பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர்தான் திருமண நிகழ்ச்சி போன்றவை நடத்த வேண்டும் என்று இரு வீட்டாரையும் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் முதலிபாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், தாராபுரம் சாலையைச் சேர்ந்த 35 வயது நபரும் நாச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சைல்டுலைன் அதிகாரிகள் சென்றனர். ஆனால் அதற்குள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இது தொடர்பாக திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஊர் நல அலுவலர் மகாலட்சுமி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் அந்த வாலிபர் மற்றும் இரு வீட்டாரையும் அழைத்து விசாரணை செய்தனர்.

அப்போது பெண்ணுக்கு 18 வயது ஆவதற்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதாலும் பெண்ணின் சம்மதத்தோடுதான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் பெண்ணின் வீட்டார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர்தான் திருமண நிகழ்ச்சி போன்றவை நடத்த வேண்டும் என்று இரு வீட்டாரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News