ஆன்மிகம்
திருநள்ளாறு

கொரோனா சூழலுக்கு ஏற்ப சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும்

Published On 2020-11-28 03:54 GMT   |   Update On 2020-11-28 03:54 GMT
கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
காரைக்கால் :

காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக பிரசித்திப்பெற்ற சனி பகவான் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி பந்தல்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, பிரகார உலாவாகக் கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தில் பூஜை செய்து நடப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக, சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப, நோய் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும். இதுவரை நடந்த சனிப்பெயர்ச்சி விழாவின்போது, என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ, அவை அனைத்தும் இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்படும்.

மாவட்டங்களுக்கு இடையே, பஸ், ரெயில் போக்குவரத்து போன்ற வசதிகள் செய்யப்படும். பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, கொரோனா சமூக இடைவெளி, கைகழுவும் வசதி, அன்னதானம், பாதுகாப்பு, மருத்துவம் போன்ற அனைத்து நிலைகளிலும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் காரைக்கால் மாவட்டம் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்யும்.

பக்தர்கள் வசதிக்காக, வழக்கம்போல் புதுச்சேரியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுவார்கள். விழாவிற்கு முன்னதாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் கோவிலுக்கு வருகை புரிந்து உரிய ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News