செய்திகள்
சித்தராமையா

கருப்பு பூஞ்சை நோய் குறித்து வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்: சித்தராமையா வலியுறுத்தல்

Published On 2021-05-18 02:48 GMT   |   Update On 2021-05-18 02:48 GMT
வட இந்தியாவில் உடலில் மாட்டு சாணத்தை பூசிக் கொண்டவர்களிடம் இந்த கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக பரவியுள்ளதாக தகவல் வருகிறது.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று

நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை என்று சொல்லப்படும் பிளாக் பங்கஸ் நோய் தாக்கி வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்த நோய்க்கு சிகிச்சை பெற அதிக செலவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அந்த மருந்தின் விலையும் அதிகமாக உள்ளது. இந்த நோய்க்கு ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம், 30 நாட்களுக்கு ஊசி போட வேண்டும். அந்த ஒரு ஊசி மருந்தின் விலை கள்ளச்சந்தையில் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு இதுவரை ஒரு தெளிவான முடிவு எடுக்கவில்லை. இந்த நோய் யாருக்கு வருகிறது, ஏன் வருகிறது, எந்த சூழ்நிலையில் பரவுகிறது, அந்த நோயின் அறிகுறிகள் என்ன, அந்த நோய் தாக்கப்பட்டால் என்ன சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும், அந்த நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, கொரோனா சிகிச்சையால் அந்த நோய் பரவுகிறது என்றால், அந்த சிகிச்சை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து அரசு ஒரு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.

வட இந்தியாவில் உடலில் மாட்டு சாணத்தை பூசிக் கொண்டவர்களிடம் இந்த கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக பரவியுள்ளதாக தகவல் வருகிறது. ஸ்டிராய்டு, ஆக்சிஜன் அதிகளவில் வழங்குவதால் அத்தகைய நோயாளிகளை இது தாக்குகிறது என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

வாரம் 400 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் மாநில அரசு அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவில்லை. கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களை குறிப்பாக அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களை 3 மாதங்களுக்கு கண்காணிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஸ்டிராய்டு மூலம் குணம் அடைந்த கொரோனா நோயாளிகளை சுகாதார பணியாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த கண்காணிப்பு காலத்தில் யாருக்காவது, கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்த நோய்க்கு தேவையான மருந்தை போதுமான அளவில் மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற்று இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோயால் கண்களை இழந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News