செய்திகள்
பருப்பு வகைகள்

பருப்பு-எண்ணெய் வகைகள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

Published On 2021-06-18 03:43 GMT   |   Update On 2021-06-18 03:43 GMT
கொரோனா காரணமாக அனைத்து பணிகளும் வெகுவாக பாதித்து விட்டன. விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
சென்னை:

கொரோனா தாக்கம் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையிலும் எதிரொலித்து தான் வருகிறது. அந்தவகையில் காய்கறி போல பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

கொரோனா காரணமாக அனைத்து பணிகளும் வெகுவாக பாதித்து விட்டன. விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கூலிக்கு வேலை செய்ய ஆட்களும் வருவது கிடையாது என்பதால் அரவை எந்திரங்களிலும், கொள்முதல் நிலையங்களிலும் பணி சுணக்கம் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மொத்த சந்தைகளுக்கு பருப்பு, எண்ணெய் மற்றும் தானியங்கள் வரத்து வெகுவாக பாதிக்கப்படுகின்றன. வரத்து குறைவு ஒருபுறம் என்றால், தேவை காரணமாக இன்னொரு புறம் விலை உயர்வு ஏற்பட்டு விடுகிறது.

அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. பருப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்திருக்கிறது. எண்ணெய் வகைகளின் விலையிலும் ரூ.30 உயர்வு ஏற்பட்டு உள்ளது. நறுமண பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒரு கிலோ கசகசா ரூ.1,100-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை உயர்ந்திருக்கிறது. மிளகு ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை வரத்து பாதிப்பு இல்லாத சூழலில் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. அந்தவகையில் ரூ.1,800 வரை விற்பனையான ஒரு கிலோ ஏலக்காய் தற்போது ரூ.1,350-க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.140-ல் இருந்து ரூ.120 ஆக குறைந்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், இனி வரும் நாட்களில் எண்ணெய், பருப்பு பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு(மொத்தவிலையில்/கிலோவில்):-

துவரம் பருப்பு-ரூ.120, உளுந்தம்பருப்பு-ரூ.120, பாசிப்பருப்பு-ரூ.130, கடலை பருப்பு-ரூ.75, சீரகம்- ரூ.100, மிளகு-ரூ.500, வெந்தயம்-ரூ.100, கசகசா-ரூ.1,600, பாதாம்-ரூ.680, முந்திரி (முழு) -ரூ.650, முந்திரி (உடைத்தது)-ரூ.580, ஏலக்காய்-ரூ.1,350, பொரிகடலை-ரூ.80, நல்ல எண்ணெய் (லிட்டரில்)-ரூ.210, தேங்காய் எண்ணெய்-ரூ.200, கடலை எண்ணெய்-ரூ.160, பாமாயில்-ரூ.120.
Tags:    

Similar News