செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

பெரும்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்து வசதிகளுடன் உள்ளது- சேகர்பாபு கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

Published On 2020-01-09 09:31 GMT   |   Update On 2020-01-09 09:31 GMT
கூவம், அடையாறு கரையோரம் வசிப்பவர்களுக்காக பெரும்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்து வசதிகளுடன் உள்ளதாக சட்டசபையில் சேகர்பாபு கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று சேகர்பாபு எம்.எல்.ஏ. (தி.மு.க.) பேசும் போது, துறைமுகம் காந்தி நகரில் கூவத்தை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் 2200 வீடுகளில் வசிப்பவர்களை பெரும்பாக்கத்தில் குடியமர்த்த 10 நாட்களாக பணிகள் நடக்கிறது.

பெரும்பாக்கம் நீண்ட தொலைவில் உள்ளதால் மாற்று இடமாக வால்டாக்ஸ் பகுதியில் இடம் உள்ளது என்று ஏற்கனவே குறிப்பிட்டேன். ஆனாலும் பெரும்பாக்கத்தில் மக்கள் மறுகுடியமர்த்தப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகிறது. அங்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாதததால் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்படுகின்றது என்றார்.

இதற்கு துணை-முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தாவது:-

சேகர்பாபு சில குறைகளை சொன்னார். அது உண்மையல்ல. கூவம் நதி கரையோரம் வசிக்கும் மக்களையும் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களையும் மறு குடியமர்வு செய்யும் பணி நடைபெற்ற சூழலில் பள்ளி படிப்பு காரணமாக 2020- ஏப்ரல் முடிய மறுகுடியமர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அங்குள்ள மக்கள் தாமாகவே முன்வந்து பெரும்பாக்கம் செல்வதாக கூறியதால் கடந்த 2-ந் தேதி முதல் மறுகுடியமர்வு பணி மீண்டும் தொடங்கியது. அவ்வாறு செல்லாதவர்களுக்கு வாகனவசதி, மூன்று நாட்களுக்கான உணவும் வழங்கப்பட்டது.

பெரும்பாக்கத்தில் அடிப்படை வசதி, பள்ளிகூடம், பஸ் வசதி, நியாயவிலை கடை, தொழில்பயிற்சி மையம், பூங்காக்கள், சுடுகாடு, இடுகாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரமான வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகளை மாற்றி செல்வதற்காக 5 ஆயிரம் ரூபாய் பணமும், வாழ்வாதாரத்துக்காக மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படும்.

ரேசன் கார்டு முகவரி மாற்றம் செய்து கொடுக்கப்படுகிறது. குழந்தைகளின் கல்விக்காக முகாம் நடத்தப்பட்டு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News