செய்திகள்
கோப்பு படம்

திருப்பூர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் - 6 பேர் கும்பல் கைது

Published On 2019-10-17 11:46 GMT   |   Update On 2019-10-17 11:46 GMT
தீபாவளியையொட்டி அவினாசி, திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள வங்கியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் இரவு நேரங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இது தொடர்பாக அவினாசி போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். டி.எஸ்.பி. பரமசாமி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வழிப்பறியில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் அவினாசியில் தங்கி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்த பீகாரை சேர்ந்த முஸ்தபா அன்சாரி (வயது 26), சாந்தகுமார் (33), நவலாஷ் (20), ஆர். சாந்தகுமார் (22) மற்றும் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஸ்ரீபிரதாப் சுனில் (22), நீலகிரி மாவட்டம் அத்திக்குன்னாவை சேர்ந்த பிரதீப்குமார் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி, தோட்டா மற்றும் வழிப்பறி செய்த பணம், 4½ பவுன் நகை, செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்தபா அன்சாரி, சாந்தகுமார், நவலாஷ், ஆர். சாந்தகுமார் ஆகியோர் கொள்ளையடிக்கும் நோக்கியில் 2 துப்பாக்கிகளுடன் அவினாசி வந்துள்ளனர். இங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் பகலில் வேலை செய்து கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீபிரதாப் சுனில் (22), நீலகிரி மாவட்டம் அத்திக்குன்னாவை சேர்ந்த பிரதீப்குமார் (32) ஆகியோரும் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டனர்.

மேலும் தீபாவளியையொட்டி அவினாசி, திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள வங்கியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க வங்கியை நோட்டமிட்டது தெரியவந்தது.

மேலும் கொள்ளையடிக்க தயாராக பீகாரில் இருந்து 2 நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 6 பேரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

தீபாவளியையொட்டி மேலும் வடமாநில கொள்ளையர்கள் திருப்பூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News