செய்திகள்
கணேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்த காட்சி

முருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு

Published On 2019-10-24 07:55 GMT   |   Update On 2019-10-24 08:13 GMT
வங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர்.
திருச்சி:

திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ நகைகளை கொள்ளையடித்த திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கணேசனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணை மூலம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 23 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகளை எங்கு பதுக்கியுள்ளனர் என்று தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் திருச்சி நெ.1 டோல்கேட் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 3.75 (470 பவுன்) கிலோ நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

அந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேஷ், கணேசனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வங்கி சுவரில் கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்ட வெல்டர் ராதாகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணேசன், ராதாகிருஷ்ணனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 1.25 கிலோ நகைகளும், லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த 1.75 கிலோ நகைகளையும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேட்டுப்பட்டி சென்று அங்கு புதைத்து வைத்திருந்த 3 கிலோ நகைகளை மீட்டனர்.

அதில் 1.25 கிலோ நகைகளில் லலிதா ஜூவல்லரியின் முத்திரைகள் (டேக்) இருந்தது.

ஏற்கனவே கணேசனிடமிருந்து லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2.30 கோடி மதிப்புள்ள 6 கிலோ 100 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இன்று மீட்கப்பட்ட நகைகள் விரைவில் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேலும் வங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர். இதற்காக கணேசனை போலீ சார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

லலிதா ஜூவல்லரி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக முருகனிடம் விசாரிக்க, அவனை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் திருச்சி தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முருகனிடம் விசாரிக்கும்போது இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News