உள்ளூர் செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2021-12-04 06:12 GMT   |   Update On 2021-12-04 06:12 GMT
ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று நோயின் முதல் அலை, இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு விடுபட்டு வந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஒமைக்ரான் எனப்படும் உருமாறிய கொரோன வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து, பல நாடுகளுக்குச் சென்று, தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கே வந்துவிட்டது என்ற செய்தி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் வகைகளில் ஒமைக்ரான் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும், மிகவும் ஆபத்தானது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரானை சாதாரணமாக கருத வேண்டாம் என்றும், கவனமாக இருந்து, பாதிப்பையும் பரவலையும்  கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவின் தொற்றுநோயியல் நிபுணர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தற்போது உலக அளவில் 29 நாடுகளைச் சேர்ந்த 373 நபர்கள் ஒமைக்ரான் கொரோனாத் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப தமிழ்நாடு அரசும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், விமான நிலையங்களில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தக்கூடிய பல காரணிகளை குறிப்பாக ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், காற்றோட்ட வசதியை மேம்படுத்தும் வகையில் ஜன்னல்களை திறந்து வைத்தல், காற்றோட்ட வசதி இல்லாத அல்லது கூட்ட நெரிசல் இருக்கின்ற இடங்களை தவிர்த்தல் ஆகியவற்றை பின்பற்றுவதில் தமிழ்நாட்டில் சற்று பின்னடைவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு.  

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோர் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இது குறித்த விழிப்புணர்வையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெலுங்கானா மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது.



எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, 'வருமுன் காப்பதே சிறந்தது' என்பதற்கேற்ப, ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்றுமாறு தகுந்த அறிவுரைகளை வழங்கி, அவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும் வெளிநாட்டுப் பயணியரை கண்காணிப்பதிலும், அண்டை மாநிலங்களின் எல்லைகளில் கண்காணிப்பை கடுமையாக்குவதிலும் எவ்வித சுணக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News