லைஃப்ஸ்டைல்
இரட்டை முகக்கவசம்

இரட்டை முகக்கவசம் அணிவது நல்லதா?

Published On 2021-07-01 08:30 GMT   |   Update On 2021-07-01 08:30 GMT
அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முக கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதையடுத்து முகக்கவசம் அணியும் விஷயத்தில் பலரும் அலட்சியம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். சில நகரங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் வரை முகக்கவசம் தான் பாதுகாப்பு கவசமாக உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வில் இரண்டு விதமான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள்.

முதலில் ஆறு அடி இடைவெளியில் நுகரப்படும் வைரஸ்களை சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முகக்கவசம் அணிந்திருந்தால், பரவும் வைரஸ் துகள்களில் 40 சதவீதம் தடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே இரண்டு முகக்கவசம் அணிந்திருந்தபோது 80 சதவீத துகள்கள் தடுக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் முகக்கவசத்தை முதலில் அணிந்துவிட்டு அதன் மீது துணியிலான முகக்கவசம் அணிவது சிறப்பானது என்றும் பரிந்துரைக்கிறார்கள். சாதாரண முகக்கவசங்களைவிட அதிக அடுக்குகள் கொண்ட முகக்கவசங்கள் அணிவது கிருமிகள் ஊடுருவலை தடுக்க உதவும். நொய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இரட்டை முகக்கவசம் அணிவதற்கு சிரமமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் என தினமும் பலருடன் தொடர்பில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் அணியும் முகக்கவசத்தின் தரம், வைரஸ்கள், கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை பற்றி உறுதியாக தெரியவில்லை என்றால் இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. ஒரு முறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படும் முகக்கவசங்களையே ஒன்றன் மீது மற்றொன்றாக சேர்த்து அணியக்கூடாது. சர்ஜிக்கல்
முகக்கவசம்
மீது துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம். அது வைரஸ்கள் உள் நுழையும் இடைவெளியை குறைக்கும். பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கும்.

எல்லா நேரமும் இரண்டு முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. பொது போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், மோசமான காற்றோட்டம் உள்ள இடங்கள், கொரோனா வைரஸ் பரவல் உள்ள பகுதிகள், அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் இடங்கள் போன்ற பகுதிகளுக்கு செல்லும்போது இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. ஒரு முககவசம் அணிந்தாலும், வைரஸ்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். ஆனால் மூக்கை முழுமையாக மூடாமல் இருப்பது, தளர்வான முகக்கவசங்களை அணிவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
Tags:    

Similar News