செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் 2.89 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி - அதிகாரி தகவல்

Published On 2021-10-26 04:58 GMT   |   Update On 2021-10-26 04:58 GMT
திருப்பூர் மாவட்ட அளவில் கடந்த2014, 2015ல் 3.10 லட்சம் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேல் கறவை மாடுகள் உள்ளன. ஆண்டுக்கு இருமுறை கால்நடை பராமரிப்புத் துறையினர் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் மாநில அரசின் சார்பில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது மத்திய அரசின் சார்பில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தாண்டுக்கான இரண்டாவது தவணை தடுப்பூசி கடந்த செப்டம்பர் மாதம் போட வேண்டிய நிலையில்  தற்போது மாவட்ட வாரியாக, மருந்துகள் வந்து சேர்ந்துள்ளன. 

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் பரிமள்ராஜ்குமார் கூறுகையில்:

மாவட்டம் முழுக்க 2 லட்சத்து 89 ஆயிரத்து 450 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கும் என்றார். திருப்பூர் மாவட்ட அளவில் கடந்த2014, 2015ல்  3.10 லட்சம் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இடைப்பட்ட ஆண்டுகளில் மாடுகளின் எண்ணிக்கை மெல்ல குறைந்து தற்போது 2.89 லட்சமாக உள்ளது. விவசாய தொழிலில் ஈடுபடுவோர் கால்நடைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டதுதான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

உதாரணமாக ஒரு விவசாயி 30 மாடுகளை வைத்திருந்த நிலையில் அவரது பிள்ளைகளும் விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது விவசாயிகளின் பிள்ளைகள் உயர்கல்வி படித்து, வேலைக்கு செல்வது, சொந்தமாக தொழில் துவங்குவது, வெளியூரில் வேலைக்கு செல்வது என தங்களது பெற்றோர் செய்து வந்த தொழிலை கைவிட்டதால் மாடுகளை பராமரிக்க முடியாமல் 10, 15 மாடுகளை அக்குடும்பத்தினர் விற்று விடுகின்றனர்.

இதுபோன்ற நிலைதான் மாடுகளின் எண்ணிக்கை குறைய காரணம்‘ என்கின்றனர் விவசாயிகள். முந்தைய ஆண்டுகளில் கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் அதிகரித்திருந்தது. இதனால் மாடுகளின் பால் கறவை திறன் குறைவது, மாடுகள் இறந்து போவது அதிகரித்தன.

தற்போது கால்நடை பராமரிப்பு துறையினர் சரியான இடைவெளியில் தடுப்பூசி செலுத்துவது, கால்நடை பராமரிப்பில் உரிய ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவதால் பால் கறவை அதிகரித்திருக்கிறது. 

இதனால் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் பால் உற்பத்தி குறையவில்லை என்கின்றனர் கால்நடை பராமரிப்புதுறையினர்.
Tags:    

Similar News