ஆன்மிகம்
இயேசு

இயேசுவின் மன்னிப்பு

Published On 2021-11-16 07:10 GMT   |   Update On 2021-11-16 07:10 GMT
கடன்பட்ட இருவர் என்ற உவமையின் வாயிலாக இயேசு தம் புதிய உடன்படிக்கையின் அம்சங்களை அறிவித்தார். அதோடு இன்றைய உலகிற்கு தேவையான சில நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட, படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார், இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.

பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.

பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.

கடன்பட்ட இருவர் என்ற உவமையின் வாயிலாக இயேசு தம் புதிய உடன்படிக்கையின் அம்சங்களை அறிவித்தார். அதோடு இன்றைய உலகிற்கு தேவையான சில நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அதன்படி ‘நேர்மையாளரை அல்ல, பாவிகளையே மனம்மாற அழைக்க வந்தேன்’ என்று இயேசு அறிவித்தார். (மத்தேயு 9 12-13). இயேசுவின் புதிய உடன்படிக்கையில் ‘கடைசியானோர் முதன்மையாவர், முதன்மையானோர் கடைசியாவர்’ (மத்தேயு 19-30). ‘தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்’ (லூக்கா 14-11).
Tags:    

Similar News