ஆன்மிகம்
ஹாசனாம்பா தேவி கோவில்

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் கோவில்

Published On 2020-11-10 08:40 GMT   |   Update On 2020-11-10 08:40 GMT
ஹாசனாம்பா தேவி கோவில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும்.
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற சிறப்பு மிக்க தலம் உள்ளது. இது ஆதி காலத்தில், அதாவது அர்ச்சுனனின் பேரனும், பரீட்சித்து மகாராஜாவின் மகனுமான ஜனமேஜெயன் ஆட்சி செய்த இடம் என்று சொல்லப்படுகிறது. அப்போது இந்த இடம் ‘சிம்ஹாசனபுரி’ என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்தப் பகுதியானது ‘ஹாசன்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஹாசனாம்பா தேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். இந்த அம்மன் இங்கு நிலைத்த பிறகே, இந்த ஊர் ‘ஹாசன்’ என்று பெயர் மாறியதாக கூறப்படுகிறது. இங்கு அம்மன், மண் புற்று வடிவில் இருள்து அருள்கிறாள்.

தலபுராணம்

பிரம்ஹிதேவி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியர்கள் 7 பேரும், வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி ஆகிய மூவரும், ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள். பிரம்ஹிதேவி, கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார். சாமுண்டி, வராகி, இந்திராணி ஆகிய மூவரும், ஹாசன் நகரில் உள்ள தேவி கெரேயில் நிலைகொண்டு இருக்கிறார்கள் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்தக் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல் வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்த வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். அதாவது 10 நாட்களும், இரவு முழுவதும் நடைசாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில், ஹாசன் மாவட்டம் மட்டும் இன்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். தலவார் குடும்பத்தினர் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை நோக்கி பயபக்தியுடன் பஜனை பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகம்.

கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் செல்வார்கள். கோவிலில் உள்ள அம்மனை வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெங்களூருவில் இருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பெங்களூருவில் பேருந்து வசதிகளும், ரெயில் மூலமும் ஹாசன் நகரத்தைச் சென்றடையலாம்.

கல்லாய் நிலைத்த திருடர்கள்

இந்தக் கோவிலின் கொடிமரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன், சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு சிவன், லிங்கவடிவில் காட்சி தருகிறார். அத்துடன் அவருடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறார். உற்சவ மூர்த்தியான சிவனின் நெற்றியில், ஒளி வீசும். இதை நாம் ஆண்டுதோறும் கோவில் நடை திறக்கப்படும் வேளைகளில் கண்டு ரசிக்கலாம்.

அதுபோல் கோவிலில் கல்லப்பா குடி என்ற சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் 4 கல் சிலைகள் உள்ளன. இதற்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது கோவிலுக்குள் புகுந்த 4 திருடர்கள், தேவியின் கழுத்தில் கிடந்த ஆபரணங்களை திருட முயற்சித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த தேவி, 4 பேரும் கல்லாய் போகட்டும் என்று சாபமிட்டதாகவும், அதனால் அந்த 4 பேரும் கல்லாய் நிலைத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 4 பேரும் நிலைகொண்ட இடம் ‘கல்லப்பா குடி’ என அழைக்கப்படுகிறது.
Tags:    

Similar News