செய்திகள்
ரஷ்யாவில் இருந்து கோடியக்கரைக்கு வந்துள்ள சிறவி வகை பறவைகள்.

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவில் வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

Published On 2020-11-21 05:10 GMT   |   Update On 2020-11-21 05:10 GMT
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிகின்றன. இதை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளன. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பலவிதமான பறவைகள் வந்து தங்கியிருந்து பின்னர் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்வது வழக்கம்.

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை(பிளமிங்கோ) இந்த சரணாலயத்திற்கு தனி சிறப்பு சேர்க்கும். மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து வரும் சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரும், வரித்தலை வாத்து, ரஷ்யாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன்(ஆலா), உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா(காச்சலாத்தி), உள்ளான் வகை பறவைகள் என 247 வகை பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் அடங்கும்.

இப்படி வந்து செல்லும் பறவைகளில் உள்ளான் வகையான ஆலா மற்றும் கிரீன்சான்ங், சாங்க்பிளவர் உள்ளிட்ட 6 வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும். மற்ற அனைத்து பறவைகளும் சீசன் காலத்தில் தங்கி விட்டு சென்று விடும்.

பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் என இந்திய அரசால் கோடியக்கரையை ‘ராம்சார் சைட்’ என அறிவித்துள்ளது என்று 1976-ம் ஆண்டு முதல் கடந்த 41 ஆண்டு காலமாக இந்த பகுதியில் பறவைகளை ஆராய்ச்சி செய்து வரும் மும்பையை சேர்ந்த பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்து குவிகின்றன. ஆனால் கொரோனா பரவலை தடுக்க பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் கூறியதாவது:-

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது செங்கால் நாரை, கூழைக்கடா, கடல் ஆலா ஆகியவை அதிகளவில் வந்துள்ளன. மேலும் தற்போது 42 வகையான உள்ளான்கள் வந்துள்ளன. கொசு உள்ளான், மூக்கு உள்ளான், கண்ணாடி உள்ளான், மண்டை உள்ளான், பச்சைக்கால் உள்ளான் ஆகியவை சுமார் 20 ஆயிரம் வந்துள்ளன.

ரஷ்யா, இந்தோனேஷியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறவி வகை பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. இதில் ஊசிவால் சிறவி, பனங்கொட்டை சிறவி, தட்ட அலகு சிறவி ஆகியவை அதிகளவில் வந்துள்ளன. இதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் விசில் தாரா பறவையும் தற்போது வந்துள்ளன. இந்த வகை பறவைகள் கோடியக்கரை, கெம்ப்லாஸ்ட் உப்பள நீர்த்தேக்கப்பகுதி, கோவைதீவு, நெடுந்தீவு, சிறுதலைக்காடு ஆகிய பகுதிகளில் காலை வேளையில் உணவு தேடும்போது பார்க்க முடியும். தற்போது இந்த பகுதியில் குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் பறவைகள் குறைந்த அளவே காணப்படுகிறது.

பறவைகளின் அழகை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால் 4 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றுதான் காண முடியும். இந்த சரணாலயத்திற்கு ரஷ்யாவில் இருந்து 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வரும் கண்ணாடி மூக்கு உள்ளான் தற்போது அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன.

பருவ காலம் முடிந்தவுடன் இந்த பறவைகள் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றன. பருவமழை நன்றாக இருந்தால் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News