ஆன்மிகம்
இயேசு

பிதாவிடம் தன் ஜீவனை ஒப்புக்கொடுத்த இயேசு

Published On 2019-07-15 04:46 GMT   |   Update On 2019-07-15 04:46 GMT
எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு தீர்வு வந்தது போல, இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவித்ததினால் மனிதனின் பாவ வியாதிகளுக்கு தீர்வு வந்து விட்டது என்பதை குறித்துதான் இயேசு முடிந்தது என்று சொல்வதாக கூறப்படுகிறது.
சிலுவையில் தொங்கிய இயேசு 7 வார்த்தைகளை கூறுகிறார். அந்த வார்த்தைகளில் 5, 6, 7-ம் வார்த்தைகளாக என்ன கூறினார் என்று தியானிப்போம்.

தாகமாய் இருக்கிறேன் (யோவான்: 19-28) என்று இயேசு சிலுவையிலே 5-ம் வார்த்தையாக பேசுகிறார். இவருக்கு ஏற்பட்ட தாகம் சாதாரணமானதல்ல, ஆத்ம தாகம் என்று கூறப்படுகிறது. இனி எந்த ஒரு மனிதனும் நரக வேதனையை அனுப்பவிக்கக்கூடாது என்றும், அனைவரும் பரலோக இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாக உள்ளது என்று சொல்லப்படு கிறது.

மேலும் தாகமாய் இருந்த இயேசுவுக்கு புளித்த காடியை கொடுக்கிறார்கள். அந்த காடியை அவர் வாங்கியது நம்மீது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து 6-வது வார்த்தையாக முடிந்தது (யோவான்:19-30) என்று கூறுகிறார். முடிந்தது என்கிற ஒரு வார்த்தையில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.

சிலுவையை குறித்து கடவுள் திட்டமிட்டு முன்அறிவித்திருந்தது எல்லாம் முடிந்தது. வேதாகமம் பழைய ஏற்பாட்டில் அவருடைய பாடுகளை குறித்து சொல்லப்பட்டது எல்லாம் முடிந்தது. இயேசுவின் ஆவி, ஆத்மா, சரீரத்தில் ஏற்பட்ட பாடுகள் எல்லாம் முடிந்தது. இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது. மனுக்குலத்தின் மீட்புக்காக அவர் செய்தது எல்லாம் முடிந்தது என்று சொல்லப்படுகிறது.

எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு தீர்வு வந்தது போல, இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவித்ததினால் மனிதனின் பாவ வியாதிகளுக்கு தீர்வு வந்து விட்டது என்பதை குறித்துதான் இயேசு முடிந்தது என்று சொல்வதாக கூறப்படுகிறது.

இப்படி இந்த உலகத்திற்கு இயேசு மனிதனாக அவதரித்து உலகத்தில் உள்ள பாவத்திற்காக தன்னையே சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து இந்த உலகத்திற்கு வந்த காரியம் அனைத்தையும் செய்து, முடிந்தது என்று கூறி விட்டு, கடைசியாக 7-ம் வார்த்தையாக ‘பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்’ (லூக்கா: 23-46) என்று கூறுகிறார்.

ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் போது உயர் அதிகாரிகள் நமக்கு ஒரு வேலையை கொடுத்து அதை செய்ய சொல்லும் போது அந்த வேலையை திறம்பட செய்து முடித்து விட்டு அதிகாரியிடம் ஒப்படைப்போம்.

அதே போல தான் பிதாவானவர் இயேசுவை இந்த உலகத்திற்கு என்ன நோக்கத்திற்காக அனுப்பினாரோ அந்த நோக்கம் நிறைவேறத்தக்கதாக மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் வாழ்ந்து மனிதனின் பாவங்களுக்காக சிலுவையில் பாடுகளை அனுபவித்து கடைசியாக தன் ஜீவனை (ஆவியை) பிதாவிடத்தில் ஒப்படைக்கிறார். இதைத்தான் சிலுவையில் கடைசி வார்த்தையாக பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்று கூறி தன் ஜீவனை விடுகிறார் என்று நாம் வேதாகமத்தில் பார்க்கிறோம்.

ஆம் தேவ பிள்ளைகளே நம்முடைய பாவங்களுக்காக தன் உயிரையே சிலுவையில் தியாகம் செய்ததை இந்த நாட்களில் நினைவுகூர்ந்து அவருக்கு கீழ்படிந்து இந்த உலகத்தில் நல்ல மனிதர்களாகவும், பாவம் செய்யாதவர்களாகவும் இயேசுவின் வழியில் நடக்க தீர்மானிப்போம். கடவுள் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

சகோ.பிரவின், உடுமலை.
Tags:    

Similar News