ஆன்மிகம்
முக கவசத்துடன் தயாரான விநாயகர் சிலையை படத்தில் காணலாம்.

22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்

Published On 2020-08-04 04:42 GMT   |   Update On 2020-08-04 04:42 GMT
வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ள நிலையில் முக கவசத்துடன் சிலைகள் தயாராகின்றன. சிலைகள் ஊர்வலம் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
பொன்னமராவதி :

விநாயகர் பிறந்த நாள், விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வித, விதமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பல அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் ஆகியவற்றை ஆங்காங்கே வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகும். அதற்கு முன்னதாக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு, சிலைகளை தயாரித்து விற்பனைக்காக வைப்பது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ளனர். மேலும் சிலைகளை ஒரு இடத்தில் மொத்தமாக வாங்கி வந்து சாலையோரம் வைத்து விற்பனை செய்பவர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கிடைக்குமா? ஊர்வலம் நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதனால் சிலை தயாரிப்பு தொழிலாளர்களும் விநாயகர் சிலைகளை அதிகம் செய்வதில் ஆர்வம் காட்டாமல், கடந்த ஆண்டை விட குறைவாக தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்குவப்படுத்தப்பட்ட மண்ணை வைத்து சுமார் 10 நாட்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில் அவைகளை செய்வதா? இல்லையா? என பல தொழிலாளர்கள் குழப்பத்தில் புலம்புகின்றனர். இதனால் சிலை தயாரிப்பு என்பது மந்தமாக உள்ளது. ஒரு சிலர் விநாயகர் சிலைகளை தற்போது உள்ள காலக்கட்டத்திற்கு ஏற்ப வடிவமைத்து வருகின்றனர். அதிலும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிந்த விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொன்னமராவதி பகுதியில் சிறிய அளவு முதல் 3 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த சிலைகளுக்கு முக கவசம் அணிந்து விற்பனை செய்கின்றனர். மண்பாண்ட தொழிலாளர்களும் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் பக்கத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், விழாவை சமூக இடைவெளி கடைப்பிடித்து கொண்டாடும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களும், வியாபாரிகளும் எதிர்பார்த்துள்ளனர். 
Tags:    

Similar News