உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை ஒழுங்கு விற்பனைக்கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு

Published On 2022-04-16 08:08 GMT   |   Update On 2022-04-16 08:08 GMT
கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு குறைந்த பட்ச ஆதார விலையான ரூ.105.90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. 

உற்பத்தியாகும் தேங்காய் நேரடியாகவும், விவசாயிகள் களம் அமைத்து  கொப்பரையாக உற்பத்தி செய்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் அரசு கொப்பரை கொள்முதல் மையம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு குறைந்த பட்ச ஆதார விலையான ரூ.105.90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில்  விவசாயிகளிடமிருந்து 250 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை சரிந்து கிலோ 85 முதல்  90 ரூபாய் வரை மட்டுமே விற்று வருவதால், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:-

கொப்பரை கொள்முதல் மையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 

இதுவரை, 250 டன் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

வெளி மார்க்கெட்டில் விலை குறைந்துள்ளதால், அரசு கொப்பரை கொள்முதல் மையத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. உடுமலை கொப்பரை மையத்தில், ஜூலை வரை 2,500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எனவே, விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், கொப்பரை விற்பனை செய்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் எண், வங்கி பாஸ் புத்தக நகல், சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் விற்பனைக்கூடத்தை தொடர்பு கொள்ளலாம்.

கடந்தாண்டு பருவ மழை அதிக அளவு பெய்துள்ளதால் நடப்பு சீசனில் 50 சதவீதம் வரை தேங்காய் மகசூல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே இருப்பு வைத்துள்ள கொப்பரையை  விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள கொப்பரை கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். 

இவ்வாறு கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News