செய்திகள்

கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி டிஸ்மிஸ்?

Published On 2018-10-01 11:02 GMT   |   Update On 2018-10-01 11:02 GMT
கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி, வேறு கல்லூரிக்கு செல்லாததால் அவர் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. #ChennaiStudentharassment #AgriCollege

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இதையடுத்து, பாலியல் புகார் கூறிய மாணவி திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்க வில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கும் வேண்டும். அதுவரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவியை ‘டிஸ்மிஸ்’ செய்ய கோவை வேளாண் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அக்டோபர் 1-ந் தேதி வரை பல்கலைக்கழகம் கெடு விதித்திருந்தது. அதற்குள் திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து வெளியேறி திருச்சி கல்லூரியில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

இல்லையெனில் டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே கடைசி எச்சரிக்கை என்று மாணவிக்கு கடந்த 26-ந் தேதி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.வாழவச்சனூர் கல்லூரி நிர்வாகமும், தங்களுடைய கல்லூரியை விட்டு வெளியே செல்லுமாறு மாணவியிடம் கடிதம் கொடுத்தது.

இந்த உத்தரவுகளை மாணவி மீண்டும் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, இன்றுடன் காலக்கெடு முடிந்ததையடுத்து மாணவி டிஸ்மிஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி இனி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மனமுடைந்த மாணவி இன்று வகுப்பறைக்கு சென்றார். மற்ற மாணவ, மாணவிகள் வேறு வகுப்பறைக்கு மாற்றப்பட்டு பாடம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து, வாழவச்சனூர் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:-

பாலியல் புகார் கூறிய மாணவி திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் செல்லவில்லை. கால அவகாசம் வழங்கப்பட்டும் மாணவி திருச்சி கல்லூரிக்கு செல்லாததால் ‘டிஸ்மிஸ்’ செய்யப்படுகிறார்.

இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகம் விரைவில் உத்தரவு ஆணை வெளியிடும். கல்லூரியை விட்டு மாணவியை நாங்களே வெளியேற்றுவோம். மீண்டும் அவரை கல்லூரிக்குள் சேர்த்து கொள்ள மாட்டோம் என்றார். #ChennaiStudentharassment #AgriCollege

Tags:    

Similar News