இந்தியா
பிரியங்கா காந்தி

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்!

Published On 2022-01-13 07:50 GMT   |   Update On 2022-01-13 07:50 GMT
மக்கள் பிரச்சனைக்காக சண்டையிடும் வேட்பாளார்களை தேர்தலில் நிறுத்துவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உன்னாவ்:

2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் '2017-ம் ஆண்டில் தன்னை பா.ஜ.கவை சேர்ந்த எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்’ என உள்ளூர் போலீசில் புகார் செய்தார். 

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி.போலீசாரால் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திலும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2019 ஜூலை மாதம் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரின் வக்கீல் மற்றும் உறவினர்கள் ரேபரேலி நோக்கி காரில் சென்றனர். அப்போது, அந்த கார் மீது லாரி மோதியதில் இளம்பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர். அந்த இளம்பெண்ணும் அவரது வக்கீலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இதற்கும் குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளில் 2019 டிசம்பர் மாதம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் குல்தீப் சிங் செங்கார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குல்தீப் சிங் செங்கார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாஜக அரசுக்கு பெரும் கெட்ட பெயராக அமைந்தது. இதையடுத்து குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் பா.ஜ.க அறிவித்தது.

இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தயார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தாயார் தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை அல்லது சித்ரவதைக்கு ஆளானோருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்.

மக்கள் பிரச்சனைக்காக சண்டையிடும் வேட்பாளார்களை நாங்கள் தேர்தலில் நிறுத்துவோம். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்தை நோக்கி எங்களுடைய பிரச்சாரம் இருக்கும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
Tags:    

Similar News