செய்திகள்
கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் பொடி தயாரிக்க வந்துள்ள மூலப்பொருட்களை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

புதுக்கோட்டை டாம்ப்கால் தொழிற்சாலையில் தினந்தோறும் 450 கிலோ கபசுர குடிநீர் பொடி தயாரிப்பு

Published On 2021-04-16 09:12 GMT   |   Update On 2021-04-16 09:12 GMT
புதுக்கோட்டை டாம்ப்கால் தொழிற்சாலையில் 15 வகை மூலிகைகளுடன் தினந்தோறும் 450 கிலோ கபசுர குடிநீர் பொடி தயாரிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை:

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கி ஓராண்டு முடிந்தும் தொற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கை, தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்டவைகளால் வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்தநிலையில் கோரத்தாண்டவத்தை மீண்டும் தொடங்கியுள்ள கொரோனாவின் இரண்டாவது அலை கொத்து கொத்தாக உயிர்களை பறித்து வருவதோடு, தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிபயங்கரமாக வீசத் தொடங்கியுள்ள கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய பாரம்பரிய மருத்துவம் இது போன்ற தொற்று நோய்களுக்கு கடிவாளம் போட்டது. குறிப்பாக கடந்த ஆண்டில் கொரோனாவிலிருந்தும், டெங்கு காய்ச்சலிருந்தும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நிலவேம்பு குடிநீர் சூரணம் மற்றும் கபசுர குடிநீர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் பொடிகள் சென்னையில் ஆலந்தூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் பழைய பொது மருத்துவமனை செயல்பட்டு வந்த வளாகத்தில் டாம்ப் கால் இரண்டாவது யூனிட் தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை மருந்துக் கழகம் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலக பணியாளர்களாக சிறப்பு அலுவலர் டாக்டர் மோகன் உள்ளிட்ட மூன்று பேரும், இது தவிர பொடியாக அரவை செய்தல், பேக்கிங் செய்தல் என 18 பேர் பணிபுரிகின்றனர்.

கபசுர குடிநீர் பொடி தயாரிக்க சுக்கு, கடுக்காய், ஆடாதோடை, சீந்தில், நிலவேம்பு, வட்டத்திருப்பி, சிறு தேக்கு, கோரைக்கிழங்கு, கற்பூரவல்லி, சிறுகாஞ்சொறி, அக்கரகாரம், கறிமுள்ளி, திப்பிலி, கிராம்பு மற்றும் கோட்டம் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.

இதே போல் நிலவேம்பு குடிநீர் சூரணம் நிலவேம்பு, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, விலாமிச்சை வேர், சந்தனச் சிராய், பற்பாடகம், வெட்டி வேர், மிளகு மற்றும் சுக்கு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

நாள்தோறும் சுமார் 450 கிலோ பொடி தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் சூரணம் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் இயற்கை மருந்துகளும் கையாளப்படுகிறது.

புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் டாம்ப் கால் இரண்டாவது யூனிட் சிறப்பு அலுவலர் டாக்டர். ஆர்.மோகன் கூறுகையில், நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் மட்டுமின்றி எங்களது நிர்வாக இயக்குநர் கணேஷ் 50 வகையாக நோய்களுக்கு மாத்திரைகளை தயாரிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மற்றும் மாநில மருந்து உரிமம் அதிகாரிகளுக்கு அனுப்பி அனுமதிக்கு காத்திருக்கின்றனர்.

மூட்டுவலி, ஆஸ்துமா, சளி, கொரோனா எதிர்ப்பு, அல்சர், கர்ப்பபை, மகளிர் நோய், தூசி ஒவ்வாமை, தோல், நோய் எதிர்ப்பு, மூலம் சம்மந்தப்பட்ட பிரச்சினை, நீரழிவு நோய், நரம்பு சம்பந் தப்பட்ட நோய் போன்ற வியாதிகளுக்கு மாத்திரைகள் தயாரிக்கப்படவுள்ளது. இதுதவிர இதுபோல் மேலும் பல வியாதிகளுக்கு மருந்துகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News