செய்திகள்

தக்கலை அருகே விபத்தில் 2 பேர் பலி-அரசு பஸ் டிரைவர் கைது

Published On 2019-05-11 09:55 GMT   |   Update On 2019-05-11 09:55 GMT
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:

தக்கலை அருகே முளகு மூடு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜூ, (வயது 24), டிப்ளமோ படித்துள்ளார். முளகுமூடு வயக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜின் (25). இவர் கேரளாவில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

தற்போது நண்பனின் திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொள்வதற்காக விஜின் ஊருக்கு வந்திருந்தார். நேற்று ஷாஜூ தனது மோட்டார் சைக்கிளில் விஜினை அழைத்துக் கொண்டு கல்லுவிளையில் இருந்து சுவாமியார் மடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கல்லுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஷாஜூ, விஜின் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.

படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து ஷாஜூயின் உறவினர் மகேஷ் கொடுத்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வழிவிட்டான் (58) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

விபத்தில் பலியான ஷாஜூ, விஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று தக்கலை ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

Tags:    

Similar News