செய்திகள்
கோப்புபடம்

ஐரோப்பிய கால்பந்து போட்டி கால்இறுதி ஆட்டம் நாளை தொடக்கம்: பெல்ஜியம்-இத்தாலி மோதல்

Published On 2021-07-01 10:27 GMT   |   Update On 2021-07-01 10:27 GMT
ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.

முனிச்:

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி ஐரோப்பாவில் உள்ள 11 நகரங்களில் நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

இதன் முடிவில் இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரியா, உக்ரைன், இங்கிலாந்து, குரோஷியா, செக் குடியரசு, சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச் சுக்கல், ஆகிய 16 அணிகள் 2-வதுசுற்றுக்கு முன்னேறின.

துருக்கி, பின்லாந்து, 1960-ம் ஆண்டு சாம்பியனான ரஷியா,வட மாசிடோனியா, ஸ்காட்லாந்து, சுலோவாக்கியா, போலந்து ஆகிய 8 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 26-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதன் முடிவில் டென்மார்க், இத்தாலி, செக் குடியரசு பெல்ஜியம், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

3 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 தடவை யூரோ கோப்பையை வென்ற பிரான்ஸ், நடப்புச் சாம்பியன் போர்ச்சுக்கல், 1988-ம் ஆண்டு பட்டம் பெற்ற நெதர்லாந்து, வேல்ஸ், ஆஸ்திரியா, குரோஷியா, சுவீடன் ஆகியவை 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

2 நாள் ஓய்வுக்குப் பிறகு கால்இறுதி ஆட்டங்கள் நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி லீக் ஆட்டங்களில் சுலோவாக்கியாவை வென்றது. சுவீடன், போலந்துடன் டிரா செய்தது. 2-வது சுற்றில் 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இந்த போட்டி தொடரில் ஸ்பெயின் அணி இதுவரை 11 கோல்கள் போட்டுள்ளது. 4 கோல்கள் வாங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்து லீக் ஆட்டங்களில் துருக்கியை தோற்கடித்தது. வேல்சுடன் டிரா செய்தது. இத்தாலியிடம் தோற்றது. 2-வது சுற்றில் பிரான்சை பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்கடித்தது. 7 கோல்கள் போட்டுள்ளது. 8 கோல்கள் வாங்கியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதி போட்டியில் பெல்ஜியம்-இத்தாலி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெல்ஜியம் லீக் ஆட்டங்களில் ரஷியா, டென்மார்க் பின்லாந்து அணிகளை வீழ்த்தியது. 2-வது சுற்றில் போர்ச்சுக்கலை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. பெல்ஜியம் அணி 8 கோல்கள் போட்டுள்ளது. ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது.

1968-ம் ஆண்டு சாம்பியனான இத்தாலி லீக் ஆட்டங்களில் துருக்கி, சுவிட்சர்லாந்து, வேல்ஸ் அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்றில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. 9 கோல்கள் போட்டுள்ளது. ஒரு கோல் வாங்கி உள்ளது.

3-ந் தேதி நடைபெறும் 3-வது மற்றும் 4-வது கால் இறுதி ஆட்டங்களில் டென்மார்க்-செக்குடியரசு (இரவு 9.30 மணி), இங்கி லாந்து-உக்ரைன் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன. 

Tags:    

Similar News