செய்திகள்
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

நில அபகரிப்பை தடுக்கக்கோரி அண்ணன்-தம்பி தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published On 2020-11-24 14:44 GMT   |   Update On 2020-11-24 14:44 GMT
நில அபகரிப்பை தடுக்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அண்ணன், தம்பி தர்ணாவில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கத்திக்காரன் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 44). இவரது தம்பி சீனிவாசன் (41) ஆகிய இருவரும் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பத்திர நகலுடன் அங்கும், இங்குமாக அலைந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த போலீசார், இருவரையும் அழைத்து விசாரித்தபோது, நகல் ஆவணத்தை காண்பித்து எங்கள் சொத்தை, சித்தப்பா அபகரிக்க முயற்சி செய்கிறார். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் புகார் பெட்டியில் மனு எழுதி போட சொன்னார்கள். பின்னர் இருவரும் மனுவை பெட்டியில் போட்டு விட்டு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, தரையில் உருண்டு புரள தொடங்கினர். பின்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது தந்தை பெயரிலான, நிலத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம். அதை எங்கள் சித்தப்பா மற்றும் சிலர் அபகரிக்க நினைக்கிறார்கள். இனியும், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். கலெக்டர் அலுவலகம் முன்பாகவே தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்வோம் என்றனர்.

திருச்சி திருவெறும்பூர் எழில்நகர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவரும், பாரதீய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட துணைத் தலைவருமான இந்திரன், அக்கட்சியின் எஸ்.சி. அணி தலைவர் பாஸ்கர் மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்களுடன் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில்நகர் ஆபீசர்கள் டவுன் பகுதி வீட்டுமனை பகுதியாக உள்ளது. ஆனால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முயற்சி செய்வதை அறிந்து அப்பகுதி மக்கள் மாற்று இடம் தேர்வு செய்ய ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே எழில்நகர் ஆபீசர் டவுன் பகுதியை குடியிருப்பு மனை பகுதி என்பதை ரத்து செய்து, குடியிருப்புவாசிகளுக்கு எதிராக பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் 30 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். எனவே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்றத்தின் தீர்மானத்தை ரத்து செய்து திடக்கழிவு திட்டத்திற்கு மாற்று இடத்தை பரிசீலித்து பொதுமக்களின் வாழ்விடத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

திருவெறும்பூர் மலைக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் துவாக்குடி வாழவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் குடியிருக்க வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், எனவே, தங்களுக்கு அரசு நிலத்தில் வசிக்க இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனித்தனியாக மனு கொடுத்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் டோபிக்காலனி மக்கள் கொடுத்த மனுவில், ‘39-வது வார்டு டோபி காலனியில் பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், த.மு.மு.க.வினர் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்க முயற்சித்து வருகிறார்கள். அதை தடுக்க வேண்டும்‘ என கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன கொடுத்துள்ள மனுவில், ‘அரியமங்கலம் மாநகராட்சி குப்பை கிடங்கை முழுமையாக அகற்றி, அங்கு ஒருங்கிணைந்த மத்திய பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்‘ என கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News