ஆன்மிகம்
பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

தஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2021-08-02 06:51 GMT   |   Update On 2021-08-02 06:51 GMT
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் 27 நாட்களுக்குப்பிறகு தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தஞ்சை பெரியகோவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து தஞ்சை பெரியகோவில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி முதல் மீண்டும் மூடப்பட்டது.

அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் தினமும் 4 கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தொற்று குறைந்ததையடுத்து கோவில் கடந்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், சுவாமிமலை முருகன் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிலில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது தெரியாமல் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் முன்பு இரும்பு தடுப்பு கம்பிகள் கொண்டு அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில பக்தர்கள் பெரியகோவில் முன்பு உள்ள சாலை ஓரம் நின்று வழிபட்டனர்.

பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 27 நாட்களுக்குப்பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் நேற்று கோவிலில் வழக்கம் போல நடைபெறும் 4 கால பூஜைகள் நடைபெற்றது. கோவில் பகுதியில் போலீசாரும் வழக்கத்தை விட அதிக அளவில் நிறுத்தப்பட்டு அவர்கள் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News