ஆன்மிகம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா 11-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-02-06 09:06 GMT   |   Update On 2021-02-06 09:06 GMT
பொள்ளாச்சி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வருகிற 11-ந்தேதி தை அமாவாசையன்று நோன்பு சாட்டுதல் திருவிழா தொடங்குகிறது.
பொள்ளாச்சி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குண்டம் திருவிழாவிற்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடக்குமா? என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நடத்துவதற்கு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி வருகிற 11-ந்தேதி தை அமாவாசையன்று நோன்பு சாட்டுதல் திருவிழா தொடங்குகிறது. இதையடுத்து வருகிற 24-ந்தேதி நள்ளிரவில் மயான பூஜை நடக்கிறது. 26-ந்தேதி இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல், 27-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். நேற்று முறைதாரர்கள் கூட்டம் கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் குண்டம் திருவிழாவை எவ்வாறு சிறப்பாக , பாதுகாப்பாக நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து கூறினர்.
Tags:    

Similar News