உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நாளை ஈஸ்டர் பண்டிகை - நள்ளிரவு ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2022-04-16 11:07 GMT   |   Update On 2022-04-16 11:07 GMT
திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
திருப்பூர்:

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு மரித்த நாளை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக அனுசரித்த தவக்காலத்தின் முக்கியமான நாளாக இது கருதப்படுகிறது. நேற்று காலை முதல் ஆலயங்களில் வழிபாடு, ஆராதனை நடத்தப்பட்டது.

ஏசுவின் சிலுவைப்பாடுகள் மூலம் உணர வேண்டிய வாழ்க்கை தத்துவம் குறித்து பைபிளில் உள்ள கருத்தை மையமாக வைத்து பாதிரியார்கள், நற்செய்தியாளர்கள் போதித்தனர். சிலுவையில் தொங்கிய ஏசு 7 வார்த்தைகளை பேசினார்.

அந்த வார்த்தைகள் மூலம் மனித சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்து குறித்தும் விளக்கப்பட்டது. பக்தர்கள் காலை முதல் உணவருந்தாமல் உபவாசத்துடன் வழிபாடுகளில் பங்கேற்றனர். மதியம் 3 மணிக்கு ஆலயங்களில் சிலுவை பாதை ஆராதனை நடத்தப்பட்டது.

திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆலயங்களில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

பங்களா ஸ்டாப்பிலுள்ள சி.எஸ்.ஐ., தூய பவுல் ஆலயம், குமார் நகரிலுள்ள ஆலயம், காங்கயம் ரோட்டிலுள்ள நல்லூர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் நடந்த புனித வெள்ளி பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு சிலுவையில் அறையுண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் ஈஸ்டர் பெருநாள், நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஏசுவின் உயிர்ப்பை நினைவு கூறும் ஈஸ்டர் பெருநாள் சிறப்பு திருப்பலி, தேவாலயங்களில் நடக்கிறது. நாளை காலையும் திருப்பலி நடைபெறுகிறது.
Tags:    

Similar News