செய்திகள்
திருமணங்களில் பங்கேற்ற திருமண வீட்டாரை படத்தில் காணலாம்.

நெல்லையில் பூட்டப்பட்ட கோவில்கள் முன்பு எளிமையாக நடந்த திருமணங்கள்

Published On 2021-05-18 02:05 GMT   |   Update On 2021-05-18 02:05 GMT
கோவில்களுக்குள் செல்ல அனுமதி கிடைக்காததால் பல்வேறு திருமணங்கள் வீடுகளிலேயே எளிமையாக நடத்தப்படுகிறது. இதில் 50 பேர் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை :

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது. இதில் கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனவே, கோவில்கள் பூட்டப்பட்டு இருப்பதால் நெல்லை மாநகரில் உள்ள நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் தினமும் வெளியே நின்று கோபுரத்தை பார்த்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

மேலும் நெல்லை மாநகரில் உள்ள மேலவாசல் முருகன் கோவில், சாலைக்குமார சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முகூர்த்த நாளில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆனால், கோவில்களுக்குள் செல்ல அனுமதி கிடைக்காததால் பல்வேறு திருமணங்கள் வீடுகளிலேயே எளிமையாக நடத்தப்படுகிறது. இதில் 50 பேர் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று வைகாசி மாதம் முதல் முகூர்த்த நாள் ஆகும். இதையொட்டி நெல்லை மாநகரில் பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கோவிலில் வைத்து தாலி கட்ட வேண்டும் என்று ஒரு சிலர் வேண்டி இருந்தனர். அந்த குடும்பத்தினர் நேற்று மணமக்களுடன் தாங்கள் வேண்டி இருந்த கோவில்களுக்கு சென்றனர். அங்கு கோவில்கள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் பூட்டப்பட்ட கோவில்கள் முன்பு நின்று இறைவனை வேண்டி திருமணங்களை எளிமையாக நடத்தினர். கோவில் முன்பு மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். இதனால் அதிகாலை நேரத்தில் ஒருசில கோவில்கள் முன்பு புதுமண தம்பதிகளையும், திருமண வீட்டார்களையும் காண முடிந்தது.
Tags:    

Similar News