செய்திகள்
முதுமையிலும் இளமையாக வாழ மூலிகை மருந்து

மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி - முதுமையை தாமதப்படுத்தும் மூலிகை மருந்து கண்டுபிடிப்பு

Published On 2019-10-05 15:05 GMT   |   Update On 2019-10-05 15:05 GMT
வயது முதிர்ச்சியால் ஏற்படும் முதுமை மற்றும் முதுமைசார்ந்த நரம்பு தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:

மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க நரம்பு மண்டலம்சார்ந்த குறைபாடுகளும் நோய்களும் அதிகரிக்க தொடங்கி விடுவது இயற்கையின் நியதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், முதுமை மற்றும் முதுமைசார்ந்த நரம்பு தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தின் அம்பாலா நகரில் உள்ள மஹரிஷி மார்கண்டேஷ்வர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜய் குப்தா, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரஜினிகாந்த் மிஷ்ரா மற்றும் இவர்களின் மாணவி குஷ்பூ ஆகியோர் கண்டுபிடித்துள்ள இந்த மூலிகை மருந்தினை ஆய்வகத்தில் உள்ள எலிகளுக்கு அளித்து பரிசோதித்ததில் நல்லபலன் கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட நாட்களுக்கு இந்த மூலிகை மருந்தை உட்கொண்ட வயது முதிர்ந்த எலிகள் இளம்வயது எலிகளைப்போல் சுறுசுறுப்பாக செயல்படுவது ஆய்வில் தெரியவந்தது. 



நரம்பு மண்டலம்சார்ந்த நோய்களும் கோளாறுகளும் மூளையில் இருந்துதான் உற்பத்தியாகின்றன என்பதால் இந்த மருந்தை சாப்பிட்ட வயதான எலிகளின் மூளையில் உள்ள புரதங்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதை இந்த ஆய்வின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது.

அதேவேளையில், இந்த மருந்து மூளையில் உள்ள உயிரணுக்களில் ஏதேனும் நச்சுத்தன்மையை உண்டாக்குமா? என்று பரிசோதித்ததில் நல்லவேளையாக எவ்வித நச்சுத்தன்மையும் ஏற்படவில்லை.இந்த மருந்தை உட்கொண்ட வேளையில் மூளையில் உள்ள உயிரணுக்கள் ஆரோக்கியமாக செயலாற்றியுள்ளன.

வயது முதிர்ச்சியை யாராலும் தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது. எனினும், நரம்பு மண்டலம்சார்ந்த நோய்களால் தாக்கப்படாமல் ஆரோக்கியமான முறையில் முதுமையை எதிர்க்கொள்ள உதவப்போகும்
இந்த அரியவகை மருந்து முழுக்கமுழுக்க மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் மனிதர்களின் பயன்பாட்டுக்கு மிகவும் உகந்ததாக அமையும் என்பதால் இதற்கான காப்புரிமைக்கும் கண்டுபிடிப்பாளர்கள் மனு செய்துள்ளனர்.
Tags:    

Similar News