உள்ளூர் செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்டிருக்கும் கடைகள்.

இன்று வணிகர் தினவிழா: கோயம்பேடு மார்க்கெட்டில் 3 ஆயிரம் கடைகள் அடைப்பு

Published On 2022-05-05 06:31 GMT   |   Update On 2022-05-05 06:31 GMT
இன்று நள்ளிரவு முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போரூர்:

வணிகர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி சூப்பர் மார்க்கெட், ஓட்டல்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.

காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வரும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று கோயம்பேடு காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை நடைபெறும் சுமார் 3 ஆயிரம் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. மளிகை மார்க்கெட்டிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மொத்த விற்பனை கடைகள் விடுமுறை என்பதால் இன்று காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்கள் ஏதும் விற்பனைக்கு வரவில்லை.

காய்கறி, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் 400 சில்லரை விற்பனை கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தன. எனினும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் வரவில்லை. இதன் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம் போல விற்பனை நடைபெற்று வருகிறது.

இன்று நள்ளிரவு முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News