செய்திகள்
தமிழக தேர்தல் ஆணையம்

மே 2ந் தேதி ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?- தமிழக தேர்தல் ஆணையம் பதில்

Published On 2021-04-19 04:05 GMT   |   Update On 2021-04-19 04:05 GMT
மே 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையை சமாளிக்கும் நடவடிக்கையாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட உள்ளது.

அரசின் மறு உத்தரவு வரும் வரையில் தமிழகம் முழுவதும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.



இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்தபோது, “வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வேட்பாளர்கள், முகவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

இப்பணிகள் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அத்தியாவசிய பணிகள் அடிப்படையில் அந்த அடையாள அட்டையுடன் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருவதில் எந்தவித தடையும் இருக்காது. எனவே திட்டமிட்டப்படி மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று அதிகாரிகள் கூறினர்.

வாக்கு எண்ணிக்கை அன்று முடிவுகளை அறிந்துகொள்வதற்காக அரசியல் கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் திரள்வது வழக்கம். ஆட்சியை பிடிக்கும் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு அந்த கொண்டாட்டத்துக்கு தடையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News