ஆன்மிகம்
முக்குறுணி விநாயகர்

மீனாட்சி அம்மன் கோவிலில் 22-ந்தேதி முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி

Published On 2020-08-20 06:23 GMT   |   Update On 2020-08-20 06:23 GMT
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியை இணைய தளத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு அடுத்து அனைவரின் கவனத்தை ஈர்ப்பது தெற்கு நோக்கி காட்சி அளிக்கும் முக்குறுணி விநாயகர். 8 அடி உயரமுள்ள அந்த விநாயகர் சிலையானது அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்ததாகும்.

திருமலைநாயக்கர் மன்னர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் உருவ சிலை மண்ணில் புதைந்து கிடந்தது. அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு வெள்ளியால் ஆன கவசம் அணிவிக்கப்படும். பின்னர் உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

இது குறித்து மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று 18 படியில் ராட்சத கொழுக்கட்டை படைக்கப்படும். குறுணி என்றால் 6 படியாகும். முக்குறுணி என்றால் 18 படி என்று பொருள்படும். இன்று (வியா ழக்கிழமை) மாலை நல்லநேரத்தில் கொழுக்கட்டை செய்வதற்கான பூஜை தொடங்கி, கொழுக்கட்டை வேக வைக்கும் பணி நடக்கும். 22-ந்தேதி காலை சதுர்த்தி தினத்தன்று உச்சி கால பூஜையின்போது 11 மணிக்கு அந்த பெரிய கொழுக்கட்டையை 4 பேர் மூலம் மூங்கில் கம்பில் சுமந்து வந்து சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.“ என்றார்.

இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில துணை தலைவர் சுந்தரவடிவேல் கூறும் போது, “முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படைக்கும் நிகழ்வு மற்றும் பூஜையை பக்தர்கள் காணும் வண்ணம் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழக அரசு, மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனரை கேட்டு கொள்கிறோம். இது பக்தர்களின் வேண்டுகோள் ஆகும்.“ என்றார்.
Tags:    

Similar News