உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் சாலைகள் அமைக்கப்படும்

Published On 2022-01-11 09:55 GMT   |   Update On 2022-01-11 09:55 GMT
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கடந்த ஒரு மாத காலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை நீர்வள ஆதார துறையினர் படிப்படியாக அகற்றி வருகின்றனர்.

இப்பணிகளை நேற்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் குமார வேல்பாண்டியன், அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன், தாசில்தார் லலிதா, நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் குணசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

 ஒரு காலத்தில் கவுண்டன்யமகாநதி ஆறு பார்க்க ஆசையாக இருந்தது இங்கு நடைபெறாத அரசியல் கூட்டமே இல்லை எனலாம், மாலை ஓய்வு நேரத்தில் கிடைக்க கடற்கரை மாதிரி இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஓடை போல் மாறி உள்ளது.

அதிகாரிகள் 1424 ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்துள்ளனர் தற்போது 320 ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். மீதுமுள்ள ஆக்கிரமிப்புளை அகற்றி மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் இருபக்கமும் சாலைகள் அமைக்கப்படும்.

மேலும் இந்த சாலைகள் பைபாஸ் சாலை போன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கும் இதற்காக அமைச்சர் என்னுடைய இலாக்காதான் எனவே இத்திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுடன் கலந்து பேசி உள்ளேன் அவர் அனைவருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்துள்ளார். 

எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும்.
Tags:    

Similar News