செய்திகள்
ரஷித் கான்

மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான் சூப்பர் லீக்: இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தியது லாகூர் குவாலண்டர்ஸ்

Published On 2021-06-10 09:30 GMT   |   Update On 2021-06-10 09:30 GMT
ரஷித் கான் கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாச, லாகூர் குவாலண்டர்ஸ் கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடர் தொடங்கியது. மார்ச் 4-ந்தேதி வரை 14 போட்டிகள் நடைபெற்ற நிலையில், வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, உடனடியாக போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள போட்டிகளை அபு தாபியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விரும்பியது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவிக்க ஜூன் 9-ந்தேதி முதல் (நேற்று) ஜூன் 24-ந்தேதி வரை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் போட்டி அபு தாபியில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் லாகூர் குவாலண்டர்ஸ்- இஸ்லாமாபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. பஹீம் அஷ்ரப் அதிகபட்சமாக 24 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லாகூர் குவாலண்டர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் சோஹைல் அக்தர் 30 பந்தில் 40 ரன்கள் அடித்தார். பஹர் ஜமான் (9), முகமது பைஜான் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

லாகூர் அணிக்கு கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. ஹசன் அலி அந்த ஓவரை வீசினார். முதல் ஐந்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் கடைசி பந்தில் சிக்சர் விட்டுக்கொடுத்தார். இதனால் லாகூர் அணி 19-வது ஓவரில் 7 ரன்கள் எடுத்தது.



கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 6-வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய ரஷித் கான் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இதனால் லாகூர் 4 பந்தில் 14 ரன்கள் அடித்தது. கடைசி 2 பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 1 ரன்கள் அடிக்க போட்டி டை ஆனது. கடைசி பந்தில் ஒரு சிங்கிள் அடிக்க, லாகூர் அணி சரியாக 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ரஷித் கான், பேட்டிங்கில் 5 பந்தில் 15 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
Tags:    

Similar News