செய்திகள்
பணம் கடத்தி செல்லப்பட்ட லாரியையும், டிரைவரையும் படத்தில் காணலாம்.

திருப்பூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்?

Published On 2021-06-10 11:15 GMT   |   Update On 2021-06-10 11:15 GMT
சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கோழிக்கோடுக்கு செல்லும் போது நண்பர் ஒருவர் தன்னிடம் ரூ.39 லட்சத்து 75ஆயிரம் பணத்தை வழங்கியதாக டிரைவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் தனியார் மில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது ஒரு பண்டலில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து எண்ணிய போது ரூ.39 லட்சத்து 75ஆயிரம் வரை இருந்தது. அந்த பணம் குறித்து லாரி டிரைவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ராகவன் (வயது 56) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து  சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்றதாகவும், வழியில்  நண்பர் ஒருவர் தன்னிடம் ரூ.39 லட்சத்து 75ஆயிரம் பணத்தை வழங்கி,கோழிக்கோட்டில் உள்ள உறவினர் ஒருவரிடம் கொடுத்து விடுமாறு கூறியதால் நான் அதனை வாங்கி வந்தேன் என்றார்.

அந்த பணத்தை டிரைவர் ராகவனிடம் கொடுத்த நபர் யார்? எதற்காக கொடுத்து அனுப்பினார்? இவ்வளவு பணம் கொடுத்து அனுப்ப என்ன காரணம்? ஹவாலா பணமா? என்று  தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், கார்த்திக்கேயன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங்சாய் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News