செய்திகள்
மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பேட்டி அளித்தபோது எடுத்தபடம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிப்பு

Published On 2021-02-04 04:57 GMT   |   Update On 2021-02-04 04:57 GMT
இந்தியாவில் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
மதுரை:

உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந் தேதி அனுசரிக்கப்படும். அதையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் புற்றுநோய் தின கருத்தரங்கு நடந்தது. அதில் ஆஸ்பத்திரியின் புற்றுநோயியல் பிரிவின் துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார், முதுநிலை மருத்துவ நிபுணர் கிருஷ்ணகுமார் ரத்னம், புற்றுநோயியல் அறுவைசிகிச்சை முதுநிலை மருத்துவ நிபுணர் விஜயபாஸ்கர், புற்று நோயியல் கதிர்வீச்சு பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர். செல்வகுமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

உலக அளவில் ஏற்படும் இறப்புகளில் 6-ல் ஒன்று புற்று நோயால் ஏற்படுகிறது. இந்தியா புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையில் உலகளாவிய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. மரணங்களுக்கான முதன்மை காரணமாக, இதயநோய்களுக்கு அடுத்து புற்றுநோய்கள் திகழ்கின்றன. ஆண்டுதோறும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சுமார் 8 லட்சம் இறப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நோய் பாதிப்புகளின் அடிப்படையில் தமிழகம் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இத்தகைய அதிக இறப்பு விகிதத்திற்கான ஒரு முக்கிய காரணம் தாமதமாக நோய் கண்டறியப்படுவது ஆகும். அதற்கு முக்கியக் காரணங்கள் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பரிசோதனைகளை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமை அல்லது அவற்றை செய்வதில் உள்ள தயக்கம் ஆகியவைகளே ஆகும்.

மேலும் இந்தியாவிலும், தமிழகம் போன்ற மாநிலங்களிலும், புற்றுநோயை இறுதிகட்டத்தில் முற்றிய நிலையை எட்டிய பிறகே கண்டறியப்படும் போக்கு அதிகம் காணப்படுகிறது. அவ்வாறு தாமதமாகக் கண்டறியப்படும் நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் முன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோய் இறப்பு விகிதத்தை பாதியாக்கலாம்.

புற்றுநோயில் 200-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலும் புற்றுநோய் மார்பகம், வாய், நுரையீரல், வயிறு மற்றும் பெருங்குடல் அல்லது மலக்குடல் ஆகிய பகுதிகளில் தோன்றுவதே அதிகமாக உள்ளது. மேலும் ஆண்கள் புகையிலைப் பயன்பாடு காரணமாக தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும், பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் அதிகம் காணப்படுகின்றன.

புற்றுநோய் 4 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகளில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவைகள் அடங்கியுள்ளன. அதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். மேலும் சீரான உணவுமுறை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றை மேற்கொள்ளுவதாலும், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைக் கைவிடுவதாலும் புற்றுநோயில் இருந்து விடுபடலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News