செய்திகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

கொலப்பசியுடன் இருக்கிறேன்: ஓய்வு குறித்து கேட்டபோது கர்ஜித்த ‘ஸ்விங்’ சிங்கம் ஆண்டர்சன்

Published On 2020-08-10 14:08 GMT   |   Update On 2020-08-10 14:08 GMT
ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பசியில் இருக்கிறேன் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தவர். மேலும் பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் புதிய பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.

38 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

கொரோனாவிற்கு பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்டில் இங்கிலாந்து அணி விளையாடியுள்ளது. இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

இதற்கிடையே ஓய்வு குறித்து அவரிடம் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தற்போதும் ஓய்வு குறித்து கேட்ட கேள்விக்கு இன்னும் விக்கெட் வீழ்த்தும் பசியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அதுவரை விளையாட விரும்புகிறேன். இந்த வாரம் நான் செய்ததைப் போலவே நான் பந்துவீசினால், ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு என் கைகளில் இருந்து பறிக்கப்பட்டுவிடும். அது தேர்வு விவகாரமாகிவிடும்.

கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தீராத பசியில் உள்ளேன். இந்த வாரத்தில் ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதால் ஓய்வு பற்றி பேசப்படுகிறது இது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியதாக நினைக்கிறேன். இது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம். எல்லோருக்கும் இதுபோன்ற மோசமான போட்டி அமையும். நான் சிறப்பாக பந்து வீசவில்லை. ரிதம் சரியாக கிடைக்கவில்லை என உணர்கிறேன். கடைசி 10 வருடத்தில் முதன்முறையாக மைதானத்தில் நான் சற்று எமோசனல் ஆகிவிட்டேன். விரக்கியடைந்தேன்.

நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில், விரக்தியடையும்போது, சற்று கோபம் அடைந்து மேலும் வேகமாக பந்து வீச முயற்சி செய்வேன். அதற்கு எந்த பலனும் கிடைக்காது. தற்போது அந்த சம்பவம் எனக்கு இந்த போட்டி ஞாபகப்படுத்தியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்ன தேவை என்பதை என்னால் இன்னும் ரசிகர்களுக்கு காட்ட முடியும் என்று நம்புகிறேன். இது என்னுடைய கிரிக்கெட் கேரியரில் கடினமான நேரம் என்று நினைக்கவில்லை. எனது வாழ்க்கையில் இன்னொரு மோசமான விளையாட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.



நான் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணிக்கு போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் இதில்தான் கவனம் செலுத்தினேன். இனிமேலும் அதில்தான் கவனம் செலுத்துவேன். 600 விக்கெட் வீழ்த்தினால் மிகச்சிறப்பு. அந்த சாதனையை எட்ட முடியவில்லை என்றால் கிடைத்ததை வைத்து சந்தோசம் அடைவேன்.

154 போட்டிகள் என்பது சற்று அதிகம் போன்று தெரிகிறது. ஆனால், எனக்கான ஆட்டங்கள் இன்னும் இருக்கின்றன என உணர்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News