இந்தியா
கொரோனா தொற்று உறுதி

மைசூரில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: ஒரே நாளில் 72 செவிலியர்களுக்கு தொற்று உறுதி

Published On 2021-12-01 10:05 GMT   |   Update On 2021-12-01 10:05 GMT
மைசூரு மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் 72 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பொது மக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் கொரோனா 2-வது அலை முழுமையாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உலக சுகாதார மையம் கொரோனாவின் 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. அதை உறுதியாக்கும் வகையில், கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று கொத்து கொத்தாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



கொரோனாவின் இரண்டு அலைகளின்போதும் மைசூரு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவிலேயே நீண்ட காலமாக கொரோனா தொற்று பதிவு செய்த மாவட்டமாக மைசூரு உள்ளது. 2-வது அலைக்கு பிறகும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் மைசூரிவில் தாமதமாகதான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மைசூரு மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் 72 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது மக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையே பீதியை கிளப்பி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த செவிலியர் பயிலும் மாணவர்கள் மைசூரில் தங்கி படித்து வருகின்றனர்.  இதில், காவேரி செவிலியர்களுக்கான விடுதியை சேர்ந்த 43 பேருக்கும், செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் 29 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மைசூரில் 5,000 கொரோனா பரிசோதனைகளை நடத்த துணை கமிஷனர் பகதி கவுதம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கேரளாவில் இருந்து மைசூருக்குள் நுழையும் இடங்களில், பயணிகளுக்கு கொரோனா தொற்று முடிவுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

"கொரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும், மைசூரு மற்றும் சாமராஜநகர் ஆகிய மாவட்டங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது" என அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி சோமசேகர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்.. கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கல்வித்துறை மந்திரி அறிவிப்பு
Tags:    

Similar News