ஆன்மிகம்
சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய காட்சி.

மகா சிவராத்திரி: ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி-அம்பாள்

Published On 2021-03-08 03:59 GMT   |   Update On 2021-03-08 03:59 GMT
ராமேசுவரம் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழாவில் ராமர் பாதம் மண்டகப்படிக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தனர். வருகிற 12-ந்தேதி சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படி எழுந்தருளி அருள்பாலித்தனர்.

கோவிலில் இருந்து ராமர் பாதம் வரையிலும் சென்ற சுவாமி அம்பாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து சாமியை தரிசனம் செய்தனர். ராமர் பாதம் மண்டகப்படியில் மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி இரவு 10 மணிக்குகோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடைசாத்தப்பட்டது.

ராமர் பாதம் மண்டகப்படி சுவாமி அம்பாள் எழுந்தருளியதையொட்டி நேற்று கோவில் நடை சாத்தப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் இரவு வரையிலும் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் அனுமதிக்கபடவில்லை. அதுபோல் திருவிழாவின் 8-வது நாளான வருகிற 11-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு 9 மணி அளவில் வெள்ளித் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 9-வது நாளான வருகிற 12-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

Tags:    

Similar News