செய்திகள்
ரிசர்வ் வங்கி

வட்டி சலுகை தொகையை கடன்தாரர்களுக்கு 5-ந் தேதிக்குள் வழங்குங்கள் - ரிசர்வ் வங்கி உத்தரவு

Published On 2020-11-01 19:01 GMT   |   Update On 2020-11-01 19:01 GMT
மத்திய அரசு அறிவித்தபடி கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை 5-ந் தேதிக்குள் வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பல்வேறு வகையிலான கடன் வாங்கியவர்களின் 6 மாத தவணைகளை, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவலால் ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்தது. ஆனால் அந்த 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கூறியதால் கொதித்துப்போன பலரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்து, அதை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இதை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்பேரில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 23-ந் தேதி வெளியிட்டது.

அதையடுத்து, கடன்தாரர்கள் செலுத்திய கூடுதல் வட்டித்தொகையை அவர்களுக்கு நவம்பர் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதுடன், நவம்பர் மாதம் 5-ந் தேதிக்குள் கடன்தாரர்களின் கணக்குகளில், சலுகை திட்டத்தின்கீழ் கணக்கிடப்பட்ட தொகையை வரவு வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், இது தொடர்பாக வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தனது உதவி பொது மேலாளர் பிரசந்த குமார்தாஸ் மூலம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்:-

* கடந்த மாதம் 23-ந் தேதி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டதன்படி, கடன்தாரர்களுக்கு வட்டிக்கு வட்டியாக பெறப்பட்ட கூடுதல் தொகையை திரும்ப செலுத்துவது தொடர்பாக வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* அனைத்து தொடக்க (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் (வங்கிகள்), வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் (வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உள்பட), இந்த திட்ட விதிகளின்கீழ், தேவையான நடவடிக்கைகளை உரிய காலக்கெடுவுக்குள் (நவம்பர் 5-ந் தேதி) எடுக்க வேண்டும்.

* குறிப்பிட்ட கடன் கணக்குகளில் (மார்ச் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரையில்) கடன்தாரர்களுக்கு 6 மாத காலத்துக்கான கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை கருணைத்தொகையாக செலுத்துவதற்கு இந்த திட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

வட்டி சலுகை தொகை, கடன்தாரர்களின் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News