செய்திகள்
மாநில மனித உரிமை ஆணையம்

ஹெல்மெட் சோதனையின்போது விபத்தில் சிக்கிய இளம்பெண் - எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2019-09-24 03:33 GMT   |   Update On 2019-09-24 03:33 GMT
ஹெல்மெட் சோதனையின்போது விபத்தில் சிக்கிய இளம்பெண் விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை:

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் பிரியா என்ற பிரியதர்ஷினி(வயது 23). கடந்த 20-ந் தேதி இவர், தனது தாயார் பிறந்த நாளுக்காக செங்குன்றத்தை அடுத்த கே.கே.நகரில் கேக் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர், ஹெல்மெட் அணியாமல் சாலையை கடந்து செல்ல முயன்ற பிரியாவின் இருசக்கர வாகனத்தை கம்பால் தடுத்தார். பிரியா, இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது 2 கால்களும் நசுங்கியது. இந்த விபத்துக்கு போலீசாரே காரணம் என்று கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, போலீஸ் சூப்பிரண்டு தனது விளக்கத்தை விரிவான அறிக்கையாக 3 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News