ஆன்மிகம்
பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படாததால் வெறிச்சோடிய நூபுரகங்கை தீர்த்தம்.

அழகர்மலை நூபுரகங்கையில் நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை: ராக்காயி அம்மனை தரிசித்தனர்

Published On 2020-09-18 03:13 GMT   |   Update On 2020-09-18 03:13 GMT
மகாளய அமாவாசையையொட்டி அழகர்மலை நூபுரகங்கையில் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அங்குள்ள ராக்காயி அம்மனை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபடுவது வழக்கம். அதேபோன்று புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்திலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்தநிலையில் மதுரை மாவட்டம் கள்ளழகர் கோவில் அருகே அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுரகங்கை புனித தீர்த்தம் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அரசு வழிகாட்டுதல்படி இங்கு பக்தர்கள் நீராட கோவில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஆனால் இங்குள்ள ராக்காயி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர், அதன்படி நேற்று மகாளய அமாவாசையையொட்டி இங்கு பக்தர்கள் யாரும் நீராடவில்லை. மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தான் என்று கூறப்படுகிறது.

ஆனால் ராக்காயி அம்மனை விளக்கேற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். சமூக இடைவெளி விட்டு, முக கவசம் அணிந்து வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் வரும் வழியில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகருக்கும், ஆதிவேல் சன்னதியில் பூஜைகள் நடந்தது. அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில்களில் மகாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News