தமிழ்நாடு
படகு சவாரிசெய்ய ஆர்வமுடன் புறப்படும் சுற்றுலா பயணிகள்.

ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-04-16 10:09 GMT   |   Update On 2022-04-16 10:09 GMT
தொடர் விழுமுறையால் ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம்:

தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் விடுமுறையை தொடர்ந்து சேலம் மாவட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறையை கொண்டாட பலரும் சுற்றுலா தலங்களில் குவிந்துள்ளனர்.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் கொட்டிய கன மழையால் குளிர்ந்த சூழல் நிலவியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

தோட்டக் கலைத் துறை பூங்காக்கள், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட் உள்ளிட்ட காட்சி முனைப்பகுதிகளில் பயணி-கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய பயணி-கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதமான வெயில், குளிர்ச்சியான காற்று, பசுமையான சூழல் என அனைத்தும் மனதை மகிழ்விக்கும் வகையில் உள்ளது.

இதேபோல் மேட்டூர் அணைப் பூங்காவிலும் மக்கள் வருகை அதிகமாக இருந்தது.   இதனால், பூங்கா முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.  சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் அண்ணா பூங்கா, ஆத்தூர் அடுத்த ஆனைவாரி சூழல் சுற்றுலா மையம், பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதி  என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா இடங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. 

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடையில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்தோம். தற்போது கொரோனா நீங்கிவிட்டதால் ஆர்வமுடன் சுற்றுலாவுக்கு வந்துள்ளோம்” என்றனர்.
Tags:    

Similar News