செய்திகள்
பிரேசில் என்ஜினீயர் - மோடி

கோயம்புத்தூரில் படித்து ஆன்மிக ஞானியான பிரேசில் என்ஜினீயர் - மோடி வாழ்த்து

Published On 2020-11-29 20:25 GMT   |   Update On 2020-11-29 20:25 GMT
கோயம்புத்தூரில் படித்து ஆன்மிக ஞானியான பிரேசில் நாட்டை சேர்ந்த என்ஜினீயர் விஸ்வநாத் என்று அழைக்கப்படுகிற ஜோனாஸ் மசெட்டியை பிரதமர் மோடி வாழ்த்தினார்.
புதுடெல்லி:

‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவின் கலாசாரங்களும், வேதங்களும் ஒட்டுமொத்த உலகையும் ஈர்ப்பதாக கூறி பெருமிதப்பட்டார். அப்போது அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த விஸ்வநாத் என்னும் ஜோனாஸ் மசெட்டி பற்றி கூறியதாவது:-

விஸ்வநாத் என்று அழைக்கப்படுகிற ஜோனாஸ் மசெட்டியின் படைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இவர், பிரேசிலில் உள்ளவர்களுக்கு வேதாந்தத்தையும், பகவத் கீதையையும் கற்றுத்தருகிறார். விஸ்வவித்யா என்ற அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார். இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த பிறகு தனது பங்குச்சந்தை நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

பின்னர் அவர் கவனம், இந்திய கலாசாரம் குறிப்பாக வேதாந்தம் பக்கம் திரும்பியது. பங்கு வணிகத்தில் இருந்து ஆன்மிகத்துக்கு மாறினார். அவர் கோயம்புத்தூரில் உள்ள அர்ஷா வித்யாகுருகுலத்தில் 4 ஆண்டுகள் தங்கிப்படித்தார். அவர் தனது செய்தியை பரப்புவதற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது சிறப்பு. அவர் தொடர்ந்து ஆன்லைன் நிகழ்ச்சிகளை நடத்துகிறார். கடந்த7 ஆண்டுகளில் இவர் 1½ லட்சம் மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறார். அவரை நான் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News