ஆன்மிகம்
முருகப்பெருமானையும், சூரசம்ஹாரம் நடந்ததையும் படத்தில் காணலாம்.

திருப்பரங்குன்றம்-சோலைமலையில் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்த சூரசம்ஹாரம்

Published On 2021-11-10 04:09 GMT   |   Update On 2021-11-10 04:09 GMT
திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. அந்த நிகழ்ச்சிகள் முடியும் வரை நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி விழா முருகப்பெருமான் ேகாவில்களில் சிறப்பாக நடைபெறும். அதிலும் அறுபடை வீடுகளில் நடைபெறும் கந்தசஷ்டி மிகவும் சிறப்புக்குரியது.

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி, கடந்த 4-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கோவிலுக்குள் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. இதனையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து போர்படை தளபதி வீரபாகு தேவரும், முருகப்பெருமானின் பிரதிநிதியாக முதல் ஸ்தானிகரான சிவானந்த பட்டரும் அங்கு வந்தனர். இந்த நிலையில் இருமாப்பு கொண்ட சூரபதுமன் திருவாட்சி மண்டபத்தை சுற்றிவந்தான்.

முருகப்பெருமான் தன் தயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற சக்திவேலான நவரத்தினவேல் கொண்டு சூரபதுமனை வதம் செய்தார். இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவானந்த பட்டர் தனது கையில் வேல் ஏந்தி சம்ஹாரம் சார்ந்த புராண கதை கூறினார். இதனை தொடர்ந்து முருகப்பெருமான் உற்சவர் சன்னதிக்கு சென்றார். அங்கு மேளதாளங்கள் முழங்கமுருகப்பெருமான், தெய்வானைக்கு மாலை மாற்றி மகா தீபாராதனை நடந்தது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி இன்றி சூரசம்ஹாரம் நடந்தது. அதாவது, மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சன்னதி தெருவில் பக்தர்கள் குவிந்து 3 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து, அதன் பின்பு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி சட்டத்தேரில் இன்று கிரிவலம் வருவது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இன்று மாலை 4 மணி அளவில் பாவாடை தரிசனம் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்காரமும், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்பெருமாள், கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாளுக்கு வெள்ளிக் கவச அலங்காரமும் செய்யப்படுகிறது

மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலையில் நடந்தது.

இதையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பாடாகி கோவிலின் கஜமுகாசூரனையும், அடுத்து சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்த பின்னர், ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் சூரபதுமனையும் சம்ஹாரம் செய்தார்..

இதையடுத்து சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்குமேல் சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் கோவில் உள் பிரகாரத்தில் பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கொரோனா பரவல் தடுப்புக்காக இந்த ஆண்டும் சூரசம்ஹாரத்தை காண நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி இருப்பிடம் சென்ற பின்னரே, நீண்ட நேரத்துக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மேற்பார்வையில் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், உள் துறை அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சத்திரப்பட்டி, அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News