செய்திகள்
முதல் மந்திரி மம்தா பானர்ஜி

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தார் மம்தா பானர்ஜி

Published On 2021-04-22 18:58 GMT   |   Update On 2021-04-22 18:58 GMT
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
கொல்கத்தா,

மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 1, 6, 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.

நேற்று 6-வது கட்ட தேர்தல் நடந்தது. வரும் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முறையே 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் மேற்கு வங்காளத்திலும் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது. இதனால் தேர்தல் ஆணையம் அங்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் கலந்து கொள்ளும் பேரணிகள், வாகனங்களில் செல்லும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் 500 பேருக்கு கூடுதலாக கலந்து கொள்ள அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது அனைத்துக் கூட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.

இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டும் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இன்றைய தேதியிட்ட உத்தரவின்படியும், அடுத்து நடத்துவதற்காக முன்பே திட்டமிடப்பட்டிருந்த என்னுடைய கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.  பொதுமக்களிடம் காணொலி காட்சி வழியே நாங்கள் தொடர்பு கொள்வோம்.

இந்த கூட்டங்கள் எப்பொழுது நடைபெறும் என்பது பற்றிய விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News